×

மாணவர்களின் ‘பசி’ தீர்க்கும் தேனி காவலர் சிற்றுண்டி விடுதி

தேனி, ஜூன் 5: தேனி எஸ்.பி., அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘காவலர் சிற்றுண்டி விடுதி’ அருகே உள்ள அரசு ஐ.டி.ஐ.,யி்ல் படிக்கும் ஏழை மாணவர்களின் பசி போக்கி வருகிறது. தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தை ஒட்டி அரசு ஐ.டி.ஐ., செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள் தான். சீருடையில் வருவதால் பஸ்சில் இலவசமாக பயணித்து படிக்க வரும் இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் மதிய உணவிற்கு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ‛காவலர் சிற்றுண்டி விடுதியையே’ நம்பி இருக்கின்றனர். இங்கு விற்பனை செய்யப்படும் தயிர் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் உட்பட பல்வேறு கலவை சாதங்களின் விலை 15 ரூபாய் தான்.

பெரும்பாலும் ஐ.டி.ஐ., மாணவர்கள் அதிகபட்சமாக செலவிற்கு 20 ரூபாய் கொண்டு வருவார்கள். 20 ரூபாய்க்கு தேனியில் எங்குமே சுவையாக சத்தான சுத்தமான உணவு கிடைக்கவே கிடைக்காது. எனவே மாணவர்கள் மதிய உணவு வேளையில் அருகில் உள்ள காவலர் சிற்றுண்டி விடுதிக்கு சாப்பிட வந்து விடுகின்றனர். ஒரு சாப்பாடு 15 ரூபாய்க்கும், ஒரு வடை 5 ரூபாய்க்கும் வாங்கி 20 ரூபாய் செலவி–்ல் மதிய உணவினை முடித்துக் கொள்கின்றனர். கேண்டீனில் பணிபுரிவர்கள் மாணவர்கள் சாப்பிடட்டும் என்ற தாராள மனப்பான்மையுடன் வழக்கமாக கொடுப்பதை விட சற்று அதிகமாகவே சாதம் தருகின்றனர். தவிர சாதம் தீர்ந்த பின்னர் கூட மாணவர்கள் வந்தால், அவர்களை திரும்ப அனுப்பாமல் சிறிது நேரம் அமருங்கள் என்று உட்கார வைத்து சமைத்து சுடாக வழங்குகின்றனர்.

காவலர் சிற்றுண்டி விடுதி பணியாளர்கள் கூறியதாவது: இந்த சிற்றுண்டி விடுதியில் ஒரு ரூபாய் கூட லாபம் வேண்டாம். சமைத்து வழங்கும் செலவிற்கு ஏற்ப மட்டுமே கட்டணம் நிர்ணயித்தால் போதும் என மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். எனவே இங்கு 15 ரூபாய்க்கு சாதம் வாங்கினாலே ஒருநபர் திருப்தியாக சாப்பிட முடியும். கலெக்டர் அலுவலக அதிகாரிகள்,, ஊழியர்கள் கூட மதிய உணவிற்கும், டீ, காபி, வடை சாப்பிடவும் இங்கு தான் வருகின்றனர். முழுக்க முழுக்க இந்த விடுதி சேவை நோக்கில் செயல்படுகிறது. குறிப்பாக ஐ.டி.ஐ., மாணவர்கள் வந்தால் அவர்களை சிறப்பாகவே கவனிப்போம். இவ்வாறு கூறினர்.

Tags : Theni ,guard cafeteria ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு