×

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது ஆந்திராவில் மீண்டும் சிபிஐ விசாரணை செய்ய சட்ட திருத்தம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு

திருமலை, ஜூன் 5: ஆந்திராவில் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு சட்டத்தில் மாற்றம் செய்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாநில உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். டெல்லி காவல்துறை சட்டத்தின்படி 1946ம் ஆண்டு மத்திய அரசு சிபிஐ ஏற்பாடு செய்தது. இந்த சட்டத்தின்படி சிபிஐ டெல்லியில் மட்டும் விசாரணை நடத்துவதற்காக அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசு அனுமதி இல்லாமல் நேரடியாக சிபிஐ விசாரணை மற்றும் சோதனை நடத்துவதற்கு அனுமதிக்கும் விதமாக ஒவ்வொரு மாநில அரசும் சிபிஐக்கு அனுமதித்து சட்டத்தில் மாற்றம் செய்து அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த அனுமதி சட்டம் அவ்வப்போது புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று ஒருங்கிணைந்த ஆந்திராவில் சிபிஐ விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மாநில பிரிவினைக்கு பிறகும் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான அனுமதி புனரமைப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு அரசு கடந்த நவம்பர் 14ம் தேதி சிபிஐ மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ, வருமானவரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவை தவறாக பயன்படுத்துவதாகவும் கூறி மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்தார். மத்திய அரசு நிறுவனங்களில் ஊழல் நடந்தால் அதனை மாநில அரசு அனுமதி பெற்று விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு நிறுவனங்களில் அல்லது வேறு எந்த இடத்தில் விசாரணை செய்ய வேண்டும் என்றாலும் அதனை மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளே விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சிபிஐ விசாரணை நடத்துவதற்கான தடைச் சட்டத்தை ரத்து செய்து மீண்டும் சிபிஐ மாநிலத்தில் எங்கு வேண்டும் என்றாலும் எந்தவித அனுமதியும் இல்லாமல் விசாரணை, சோதனை நடத்துவதற்கு அனுமதி செய்யும் விதமாக மாநில உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி விஜய்சாய்ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சந்திரபாபு நாயுடு தன்னை எதிர்த்து யார் வந்தாலும் அவர்களுக்கு தடை விதிக்கும் விதமாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வந்தார். தற்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ மீண்டும் மாநிலத்தில் விசாரணை செய்வதற்காக உத்தரவிட்டுள்ளார். சிபிஐ, வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு சுதந்திரமாக தங்கள் பணியைச் செய்வதற்கு இந்த அரசு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

Tags : Jaganmohan Reddy ,re-investigation ,CBI ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...