×

கொல்லிமலை வட்டாரத்தில் மண்மாதிரி சேகரிக்கும் முகாம்

சேந்தமங்கலம், ஜூன் 4: கொல்லிமலை வட்டாரத்தில், நவீன முறையில் மண் மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. கொல்லிமலை வட்டாரத்தில், வாழவந்திநாடு அருகே கூச்சகிராய்ப்பட்டி,  எல்லகிராய்ப்பட்டி, தின்னனூர்நாடு அருகே  சேத்துபிலாப்பட்டி, அரியூர் நாடு அருகே சோளக்காடு போன்ற கிராமங்களில் மண்கண்டம்-மண்மாதிரி சேகரித்தல் முகாம் நடந்தது. முகாமில், கொல்லிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி, நாமக்கல் மாவட்ட  வேளாண்மை இணை இயக்குநர் சேகர்  ஆகியோர் பேசியதாவது:

ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும். அறிவியல் ரீதியாக அட்சரேகை அடிப்படையில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஸ்மார்ட்போன் மூலம் செயற்கைகோளுடன் இணைப்பு ஏற்படுத்தி, துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளன.  அந்த நிலத்தில் 50 செ.மீ ஆழத்துக்கு சதுர வடிவில் குழிகள் வெட்டப்பட்டு, அதில் 25 செ.மீ ஆழம் வரை ஒரு மண்மாதிரியும், 25 செ.மீ முதல் 50 செ.மீ வரை ஒரு மண்மாதிரியும் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன.

அதனுடன் இணைக்கப்பட்ட விவரப்படிவத்தில் மண்ணின் நிறம், மண் வகை, கடினத்தன்மை அந்த பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.  மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில், தலா 10 இடங்களில் துல்லியமான முறையில், மேல் பகுதியில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண்ணில் உள்ள சத்துக்களை அறிய ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகின்றன. கிராம வாரியாக மண்வளம் கணக்கீடு செய்யப்பட்டு, உரப்பரிந்துறைகளிலும் தேவையான மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்தந்த பகுதியில் மண்வளம் குறித்து விரிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த முகாமில், வட்டார வேளாண்மை அலுவலர் சத்தியபிரகாஷ், மாவட்ட மண் ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர்கள் தனலட்சுமி, மலர்கொடி, துணை வேளாண்மை அலுவலர் சேகர், ஆகியோர்  விவசாயிகளுக்கு மண்கண்டம்-மண்மாதிரி சேகரிக்கும் செயல்விளக்கம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரபு, காமராஜ், செல்லதுரை, விஜயசாந்தி அட்மா திட்டத்தின் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Claymill ,collecting camp ,region ,Kolimalai ,
× RELATED தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக...