×

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ராசிபுரம், மே 17: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளியை சேர்ந்த வாகனங்களுக்கான ஆய்வு, ராசிபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் மொத்தம் 272 வாகனங்களில், 264 வாகனங்கள் ஆய்வுக்காக ெகாண்டு வரப்பட்டது. எட்டு வாகனங்களை ஆய்வுக்கு கொண்டு வரவில்லை. இந்த ஆய்வின் போது, 264 பஸ்களில் அவசர வழி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா, முதலுதவி பெட்டிகள், முறையான ஆவணங்கள் உள்ளிட்ட 27 வகையில் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு உள்ளனவா என ஆய்வு செய்தனர். இதில் வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன், நாமக்கல் போக்குவரத்து அலுவலர் முருகேசன் ஆகியோர் பங்கேற்று ஆய்வு செய்தனர்.

மேலும் பள்ளி வாகன டிரைவர்களுக்கு வாகன பராமரிப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர், டிரைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், டிரைவர்களுக்கு உடல், கண் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது சில வாகனங்களில், அவசரகால திறப்பு கதவுகள் ஹைட்ராலிக் மூலம் பொருத்தப்பட்டிருந்தது. அதனை மாற்றி அமைத்து வருமாறு அதிகாரிகள் கூறினர். இதில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை ஒரு வார காலத்திற்குள் சரி செய்து, மீண்டும் கொண்டுவர அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வில் ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன், தனியார் பள்ளி கல்வி அலுவலர் மரகதம், தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி, ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நித்யா, ராசிபுரம் போலீஸ் டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் முறையாக சரி செய்து, போக்குவரத்து அலுவலர்களிடம் அனுமதி பெற்று தான் சாலையில் இயக்க வேண்டும். அப்படி இல்லையெனில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரிகள், டிரைவர்களுக்கு அறிவுரை கூறினர்.

The post தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal district ,Rasipuram Private ,School ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே தீயணைப்பு துறை...