×

இசலி கிராம விவசாயிகள் மனு ஓய்வு பெறும் நாளில் ஏபிடிஓ சஸ்பெண்டை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டம்

விருதுநகர், ஜூன் 4:  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியனை, ஓய்வு பெறும் நாளில் தமிழக அரசு சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால், பணிகள் முடங்கின.

அரசு ஊழியர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கங்களின் மாநில தலைவர், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆகிய 3 முதன்மை பொறுப்புகளை வகித்தவர் சுப்பிரமணியன். இவர், அரசு ஊழியர்களின் நலனுக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர். அரசுக்கு பல வழிகளில் குடைச்சலை கொடுத்தவர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த இவர், கடந்த மே 31ல் ஓய்வு பெறுவதாக இருந்தது. அதே நாளில் ஊரக வளர்ச்சித்துறையில் தவறான பயனாளிகளை சுப்பிரமணியன் பரிந்துரை செய்ததாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அரசுப் பணியை சரிவர செய்யாததால், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்த பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய கோரி, விருதுநகர் கலெக்டர் அலுவலகம், 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 600 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் ஊரகவளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் பணிகள் ஸ்தம்பித்தன.

இது குறித்து மாவட்ட துணைத்தலைவர் ராஜகோபால் கூறுகையில், ‘மாநில தலைவரை விதிகளுக்கு முரணாக ஒய்வு பெறும் நாளில், சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய வேண்டும். ஒய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்ததை ஊரகவளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அவரின் 32 ஆண்டு கால பணியில் ஊழல் செய்யாத நேர்மையான அதிகாரியாக இருந்தார். பெய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதி செய்யாமல் காலம் கடத்தி, ஊரக வளர்ச்சி செயலாளர் முடிவு எடுக்காமல் நிலுவையில் இருந்தது.

கடைசி நேரத்தில் ஊரகவளர்ச்சித்துறை செயலர், அவரின் அறைக்கே வரவில்லை. ஓய்வு உத்தரவு வழங்காமல் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஊழியர் நலனுக்கு போராட்டம் நடத்தியரை பழிவாங்கும் நோக்கில் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஓய்வு பெறும் நாளில் யாரையும் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. அதையும் மீறி சஸ்பெண்ட் செய்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : protest ,RSU ,RPO ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...