×

ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு முதலியார்பேட்டை கொம்யூன் வாயிலை அடைத்து நிறுத்தப்படும் வாகனங்கள்

புதுச்சேரி, ஜூன் 4: முதலியார்பேட்டையில் உள்ள புதுச்சேரி நகராட்சி அலுவலக வாயில் முன்பு ஆட்டோக்களின் ஆக்கிரமிப்புகளால் வரிசெலுத்த வரும் பொதுமக்கள் நுழைவு வாயிலை அடைத்தபடி வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் அவலம் உள்ளது. முதலியார்பேட்டை கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில், புதுச்சேரி நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிறப்பு- இறப்பு சான்றிதழ் விநியோகம் மற்றும் வீட்டுவரி, குப்பை வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பொதுமக்கள் தினமும் அதிகளவில் அங்கு வந்துசெல்வது வழக்கம். அவ்வாறு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வந்தனர்.
 ஆனால் தற்போது வாகனங்களை அங்கு நிறுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் தடை செய்து அதற்கான அறிவிப்பு பலகையை நுழைவு வாயிலில் வைத்துள்ளது. இதையடுத்து வரிசெலுத்த வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை உள்ளே நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நுழைவு வாயில் முன்பு சாலையோரம் நிறுத்த முயன்றால் அதற்கும் ஆட்டோ டிரைவர்களால் மிரட்டல் பாணியில் தடை போடப்படுகிறது. அங்கு ஆட்டோ ஸ்டாண்ட் பெயரில் சிலர் ஆட்டோக்களை நுழைவு வாயிலின் இருபுறமும் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இது எங்கள் எல்லை என்பதை காட்டும் வகையில் உருட்டுக் கட்டைகளை போட்டு வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் திணறி, கடைசியாக வேறுவழியின்றி நகராட்சி அலுவலக நுழைவு வாயிலை அடைத்தபடி நிற்க வைத்துவிட்டு செல்லும் அலுவலகத்தை காண முடிகிறது. இதன் அருகில்தான் முதலியார்பேட்டை காவல் நிலையமும் உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த அலுவலகம் முன்பு செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி இருசக்கர வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கவர்னர், முதல்வர், தலைமை செயலர் மற்றும் டிஜிபிக்கு புகார் கடிதம் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்பாகவே நகராட்சி அதிகாரிகள், டிராபிக் போலீசார், முதலியார்பேட்டை காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...