×

மின்கட்டண உயர்வை கண்டித்து மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: 100 பேர் கைது

புதுச்சேரி, ஜூன் 4:  மின் கட்டண உயர்வை கண்டித்து மின்துறை தலைமை அலுவலகத்தை பேரணியாக சென்று முற்றுகையிட முன்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 100 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர்.  புதுவையில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தில் இருந்து வெளியேற வேண்டும், கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ள நிறுவனங்களிடமிருந்து மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்துறை தலைமை அலுவலகத்தை ஜூன் 3ம்தேதி முற்றுகையிட போவதாக மக்கள் உரிமை கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று ரயில் நிலையம் எதிரே கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில், இலக்கிய பொழில் மன்றம் பராங்குசம், கிராமப்புற மக்கள் இயக்கம் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து மின்துறைக்கு எதிராக கோஷமிட்டவாறு உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அவர்களை மின்துறை அலுவலக ரோடு- சோனாம்பாளையம் சந்திப்பு சாலையில் ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், எஸ்ஐ கீர்த்தி தலைமையிலான போலீசார் பாதியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முழக்கமிட்ட சுகுமாரன், பராங்குசம், சந்திரசேகரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்நாதன், திராவிடர் விடுதலை கழகம் லோகு.அய்யப்பன், தந்தை பெரியார் திக வீரமோகன், தமிழர் களம் அழகர், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன் உள்ளிட்ட
15 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து அருகிலுள்ள கரிக்குடோனுக்கு அழைத்து சென்றனர். பின்னர் சிறிதுநேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக சிறிதுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது. மின்துறை தலைமை அலுவலகம் நோக்கி பேரணிக்கு மட்டுமே போராட்டக்குழுவுக்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : siege ,headquarters headquarters ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...