×

பார்வதிபுரம் புதிய மேம்பாலத்தில் இருக்கைகள் உடைப்பு

நாகர்கோவில், மே 30: இரவு நேரத்தில் இருளில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்ற நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலத்தில் புதியதாக போடப்பட்ட இருக்கைகளை யாரோ சமூகவிரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ.128.60 கோடி செலவில் நாகர்கோவில் பார்வதிபுரத்திலும், ரூ.179.08 கோடி செலவில் மார்த்தாண்டத்திலும் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மார்த்தாண்டம் மேம்பாலம் 2,582 மீட்டர் நீளம் கொண்டது. பார்வதிபுரம் மேம்பாலம் 1,764 மீட்டர் நீளம் உடையது. இந்த பாலங்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் பயணிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலங்களின் மீது உள்ள மின் விளக்குகள் முறையாக எரியாததால் இரவு நேரங்களில் பல இடங்களிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் இந்த பகுதியில் நிற்கின்ற நிலை உள்ளது.

இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இந்த பாலத்தில் வேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் கும்மாளமிடுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். பார்வதிபுரம் மேம்பால பகுதியில் திருவனந்தபுரம் பகுதியில் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் வசதிக்காக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இரும்பிலான இந்த இருக்கைகளை யாரோ சமூக விரோதிகள் உடைத்து போட்டுள்ளனர். அந்த பகுதியில் மதுபாட்டில்களும் காணப்படுகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் அரசு சொத்துக்களை சேதப்படுத்துவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரமாக மேற்கொள்வதுடன் சாலையையும், பாலப்பகுதிகளையும் பார் ஆக பயன்படுத்தி குடித்துவிட்டு குடிபோதையில் ரகளையில் ஈடுபடுகின்ற சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED அருமனை அருகே பழுதான மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்