×

ஆத்தூர் அருகே குப்பை மேடாகி வரும் துலுக்கனூர் ஏரி

ஆத்தூர், மே 30:  ஆத்தூர் அருகே துலுக்கனூர் ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர்-பெரம்பலூர் சாலையில்  துலுக்கனூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கான நீர்வரத்து பாதைகள் முற்றிலும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதால் நீண்ட காலமாகவே நீர்வரத்தின்றி வறண்டு போய் உள்ளது. இந்நிலையில், இந்த ஏரி பகுதியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகக்கூடிய குப்பை கழிவுகளை மொத்தமாக கொண்டு வந்து குவிப்பதும், எரிப்பதுமாக உள்ளனர். இதனால், ஏரியின் சுற்றுப்புறப்பகுதியில் சுற்றுச்சுழல் பாதிப்பு ஏற்படுவதோடு, ஏரியின் தூய்மையும் வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கால்வாய் ஆக்கிரமிப்பால் ஏரிக்கு சுத்தமாக தண்ணீர் வரத்தின்றி காணப்படுகிறது. அதேவேளையில், ஏரியையும் பாழ்படுத்தி வருகின்றனர். சுற்றுப்புற பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து ஏரியில் குவித்து வருகின்றனர். மேலும், அதனை தீயிட்டு கொளுதுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.


Tags : Tulakunoor Lake ,Atoor ,
× RELATED ஆத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மகாசபை கூட்டம்