×

பூந்தமல்லி நகராட்சியில் குடிநீர் திருட்டை தடுக்க மீட்டருடன் கூடிய இணைப்பு

பூந்தமல்லி, மே 30: பூந்தமல்லி நகராட்சியில் குடிநீர் திருட்டை தடுக்க மீட்டருடன் கூடிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருவதாக கமிஷனர் டிட்டோ தெரிவித்தார். கோடைக்காலம் தொடங்கியதையடுத்து, பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. பூந்தமல்லி நகராட்சியில் குடிநீர் திருட்டு மற்றும் வீணாவதை தடுக்கவும், மீட்டர் பொருத்தப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் டிட்டோ கூறுகையில், ‘பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் தினந்தோறும் 57 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. சிலர் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் சீராக தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகள், கடைகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியிருப்புவாசிகள் ₹ 12,500 பணத்தை பத்து மாத  தவணை முறையில் செலுத்தலாம்.

பள்ளம் தோண்டி, பைப்புகள் புதைத்து குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்துவிடும். இணைப்பு வேண்டும் என்பவர்கள் தவணை முறையில் டெபாசிட் தொகையை செலுத்தினால் மட்டும் போதும். மேலும், அந்த இணைப்பில் மீட்டர் பொருத்தப்படுவதால் ஒரு நபருக்கு 90 லிட்டர் வீதம் அந்த வீட்டிற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதுவரை வீடுகள் கடைகள் என, 5000 இணைப்புகள் உள்ளது. மேலும், 10,000 குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அனைத்து வீடுகளுக்கும் சரிசமமாக தண்ணீர் விநியோகிக்கப்படும். இந்த பணிகள் முடிந்தவுடன் தெருக்களில் உள்ள தண்ணீர் குழாய்கள் அகற்றப்படும். மேலும், இந்த இணைப்பில் மீட்டர் பொருத்தப்பட்டு ‘‘புலோட் கண்ட்ரோல் வால்வு’’ உள்ளதால் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் அவர்களுக்கு குடிநீர் வருவது நிறுத்தப்படும். அதன் பிறகு, நகராட்சி ஊழியர்கள் வந்து அந்த லாக்கை எடுத்தால் மட்டுமே அவர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும். குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால், ஏழு நாட்களில் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இதனால், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் தண்ணீர் வீணாவது வெகுவாக குறைக்கப்படும். மேலும், உரிய அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் பெற்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார். உடன் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் இருந்தார்.

Tags : Poonamalle Municipality ,
× RELATED பூந்தமல்லி நகராட்சியில் 1.38 கோடியில் நலத்திட்ட உதவி