மன்னார்குடி அருகே ரயிலில் அடிபட்டு கொத்தனார் பலி

மன்னார்குடி, மே 29: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு அருகே கர்த்தநாத புரம் பகுதி ரயில் தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒரு வர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடைப்பதாகக் அவ்வழியே சென்ற சிலர் மன்னார்குடி ரயில்வே போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில் தண்டவாளத்தில் கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
 
ரயில்வே போலீசாரின் விசாரணையில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு  இறந்து கிடந்தவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் மாஸ்கோ (52) என தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து மாஸ்கோவின் மனைவி தேவி (47) என்பவருக்கு ரயில்வே போலீசார் தகவல் அளித்தனர். அதன் பேரில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த அவர் தனது கணவரை அடையாளம் காட்டினார்.

அதனை தொடர்ந்து தேவி தஞ்சாவூர் ரயில்வே போலீசில் அளித்த புகாரில், தனது கணவர் கொத்தனார் வேலை பார்த்து வந்ததாகவும், அவருக்கு இருதயத்தில் பிரச்னை இருந்ததால்  பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மாதம் ஒரு முறை மன்னார்குடி வந்து அங்கிருந்து பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு சென்று மருந்து மாத்திரைகள் வழக்கமாக வாங்கி வருவார் என்றும், நபட்டுக்கோட்டை யில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு அங்கிருந்து பாண்டிச்சேரி செல்வதற்காக மன்னார்குடி வந்ததாகவும் கூறியுள்ளார்.
 
மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிமீ தூரத்தில் தான் மாஸ்கோ அடிபட்டு இறந்து கிடந்தார். பாண்டிச்சேரி செல்ல ரயில் நிலையத்திற்கு வந்த அவர் கர்த்தநாதபுரம் வரை ரயில்வே டிராக்கில் ஏன் நடந்து சென்றார் என்றும் அல்லது ரயிலில் போகும் போது தவறி கீழே விழுந்து அடிபட்டு இறந்தாரா என்பது குறித்தும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mannargudi ,victim ,
× RELATED மன்னார்குடி கோட்டாட்சியருக்கு பி.ஆர்.பாண்டியன் மிரட்டல்