×

இயற்கை பேரிடர் பாதிப்பு குறித்து தெரிந்து கொள்ள புதிய செயலி பதிவிறக்கம் செய்து பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு

தஞ்சை, மே 29: தஞ்சை மாவட்டத்தில் இயற்கை பேரிடர் பாதிப்புகள் குறித்து டிஎன்ஸ்மார்ட் என்ற செல்போன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சை கலெக்டர்  அண்ணாதுரை தெரிவித்திருப்பதாவது: இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் டிஎன்ஸ்மார்ட் (tnsmart) என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் தங்களின் ஸ்மார்ட் செல்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிஎன்ஸ்மார்ட் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் மழை, வெள்ளம், அதிக வெப்பம் போன்ற பேரிடர் காலங்களில் விழிப்பறிக்கை அனுப்பப்பட்டு எச்சரிக்கை செய்யப்படும். பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள டிஎன்ஸ்மார்ட் செயலி பயனுள்ளதாக இருக்கும்.

அரசு அலுவலர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து இயற்கை பேரிடரின்போது பயன்பெறலாம். மேலும் இயற்கை பேரிடரால் சேதமடைந்த வீடு, கால்நடை, பயிர் ஆகியவற்றை படம் பிடித்து பதிவேற்றம் செய்யும் வசதி டிஎன்ஸ்மார்ட் செயலியில் உள்ளது. இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags : public ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்