×

திருக்கனூரில் பழுதான உழவு இயந்திரங்கள் சரி செய்யப்படாத அவலம்

புதுச்சேரி, மே 29:  திருக்கனூரில் பழுதான உழவு இயந்திரங்கள் சரி செய்யப்படாமல் வீணாகி வருகின்றன. அதனை சரி செய்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு வேளாண் துறையின் கீழ் பாசிக் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் உழவர் உதவியகங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் சிறு, குறு, பெரு விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. மேலும், விவசாயிகள் விளை நிலங்களை உழவு செய்ய டிராக்டர், கலப்பை, சேடையோற்றும் இயந்திரம், நெல் தூற்றும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வந்தனர். நாளடைவில் பாசிக் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டு, படிப்படியாக அதன் பயன்பாடு குறைந்தது. இதன் காரணமாக, உழவர் உதவியகங்கள் மூடப்பட்டு தனியார் மூலம் விதை நெல் உள்ளிட்ட ஈடுபொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 இதற்கிடையே உழவர் உதவியகங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் பழுதாகின. பின்னர், அதனை சரி செய்வதற்கு கூட பணமில்லாமல், இயந்திரங்கள் ஆங்காங்கே ஓரம் கட்டி வைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது மக்கி வீணாகி
வருகின்றன. குறிப்பாக, திருக்கனூர் உழவர் உதவியகம் மூலம் வழங்கப்பட்டு வந்த நெல் தூற்றும் இயந்திரம், டிராக்டர், சேடையோற்றும் கருவி, கலப்பை உள்ளிட்டவை பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் பழுதாகி கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் உழவு இயந்திரங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனை கண்டறிந்து சரி செய்து மீண்டும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.




Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...