×

வேலூரில் அக்னியின் உச்சம் 112.1 டிகிரி வெயில் வறுத்தெடுத்தது வாடி வதங்கிய மக்கள்

வேலூர், மே 28:வேலூரில் அக்னி உச்சமடைந்து 112.1 டிகிரியாக வெயில் வறுத்தெடுத்தது. வெயிலின் தாக்கத்தினால் மக்கள் வாடி வதங்கினர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் வேலூர் முதன்மையானதாக உள்ளது. அக்னி தொடங்குவதற்கு முன்பே வேலூரில் வெயில் தொடர்ந்து சதமடித்து வந்தது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதும். தினமும் சுமார் 108 டிகிரி வரை வெயில் வாட்டியெடுத்து வருகிறது. இதனால் வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, வேலூருக்கு கல்வி, சுற்றுலா, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வந்து செல்லும் மக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 110.5 டிகிரி வெயில் வாட்டியெடுத்தது. நேற்று அக்னியின் தாக்கம் மேலும் உச்சமடைந்து 112.1டிகிரியாக வெயில் வறுத்தெடுத்தது.

இதனால் பெரும்பாலான சாலைகளில் காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடும் வெயிலால் சாலைகளில் கானல் நீர் குட்டைகள் ஆங்காங்கே தென்பட்டதுடன், சாலைகளில் தார் உருகி ஓடியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானக்கடைகளிலும், சாலையோர கரும்புச்சாறு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலின் இந்த கோரத்தாண்டவத்தால் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்றது. இதனால் குடிநீர் பிரச்னை அதிகரித்து ஆங்காங்கே காலிகுடங்களுடன் தண்ணீருக்காக மக்கள் திரிவதும். குடிநீர் வினியோகம் சரிவர இல்லாததை கண்டித்து போராட்டங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிகிறது. அதன்பின்னராவது வெயிலின் தாக்கம் குறையுமா? என்று பொதுமக்கள் புலம்பத்தொடங்கி விட்டனர்.

Tags : Agni ,Vellore ,winters ,
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...