×

ஆத்தூர் அருகே ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை கோரி மக்கள் போராட்டம்

ஆத்தூர், மே 28: ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் ஏரியின் உபரிநீர் வசிஷ்ட நதியை அடைந்து, அங்கிருந்து கடலுக்கு சென்று வீணாக கலக்கிறது. முட்டல் ஏரியின் உபரிநீரை வாய்க்கால் அமைத்து, கல்லாநத்தம் ஏரிக்கு கொண்டு வந்தால் கல்லாநத்தம், துலுக்கனூர், அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுவதோடு, ஆத்தூர் டவுன் உள்ளிட்ட கிராமப்புறங்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மேலும், ஆத்தூர் கல்லாநத்தம், துலுக்கனூர், அம்மம்பாளையம்,காட்டுக்கோட்டை வரையிலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இதையடுத்து, முட்டல் ஏரியிலிருந்து கல்லாநத்தம் ஏரிக்கு வனப்பகுதியையொட்டியுள்ள பகுதியில் பழைய வாய்க்காலை புதுப்பிக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் நடவடிக்கை எடுத்தனர். தங்களது சொந்த செலவில், சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் அமைக்கப்பட்ட நிலையில், திடீரென ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டும், வருவாய்த்துறையினர் கண்டுகொள்ள வில்லை என தெரிகிறது. இதனை கண்டித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நேற்று கல்லாநத்தம், துலுக்கனூர் மற்றும் அம்மம்பாளையம் கிராம மக்கள் டிஎஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் டிஎஸ்பி ராஜூ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கிராம மக்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்குமிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் உடனடியாக இந்த பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என டிஎஸ்பி ராஜூ உறுதியளித்தார். இதன்பேரில், முற்றுகையை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : lake canal invaders ,Atoor ,
× RELATED ஆத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மகாசபை கூட்டம்