×

குழந்தைகள் நலக்குழு நிர்வாகிகளை தகுதி நீக்கம் செய்ய உத்தரவு

புதுச்சேரி, மே 23: பல்வேறு புகார் எதிரொலி காரணமாக, குழந்தைகள் நலக்குழு நிர்வாகிகளை தகுதி நீக்கம் செய்யவும், விரைவில் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும்,  குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில்,  பாலியல் ரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு நீதி கிடைக்கவும் கடந்த 2000ம் ஆண்டு புதுவையில் குழந்தைகள் நலக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் சேர்மனாக சாய்குமாரி நியமிக்கப்பட்டு 2010ம் ஆண்டு வரை செய்யப்பட்டு வந்தார். அப்போது, குழந்தைகள் நலக்குழு என்பது பெயரவில் மட்டுமே செயல்பட்டு வந்தது.

பின்னர், சேர்மனாக வித்யா ராம்குமாரும், 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இக்குழுவினர் சைல்டு லைன் மூலமாக வரும் புகார்கள், நேரடியாக வரும் புகார்கள் மீது விசாரணை நடத்தி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.  அடிமட்டம் முதல் அதிகாரவர்க்கம் வரை யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை பாய்ந்தது. குறிப்பாக, காவல்துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் என தவறு செய்தவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018ம் ஆண்டு வரை இக்குழு திறம்பட செயல்பட்டு வந்தது. இதனால் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.
இக்குழுவினரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சேர்மனாக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் ராஜேந்திரனும், 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். பெண் குழந்தைகள் பாலியல் தொடர்பான புகார்களை சேர்மனிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், சேர்மன் ஆண் நபர் இருப்பதால் புகார்களை தெரிவிப்பதற்கு சங்கடம் ஏற்படும். எனவே, ராஜேந்திரனை சேர்மனாக நியமிக்கக் கூடாது என பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனையும் மீறி ராஜேந்திரன் சேர்மன் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

அன்று முதல் குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடு அதலபாதாளத்தை நோக்கி செல்ல துவங்கியது. கடந்த காலங்களில் போடப்பட்ட பல்வேறு போக்சோ வழக்குகள் இடம் தெரியாமல் போயின. நீதிமன்ற சென்ற வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த அளவுக்கு குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடு ஒரு சார்பு உடையதாக மாறிவிட்டது. அடிமட்டத்தில் இருப்பவர்கள் மீது புகார் வந்தால் உடனே பதிவு செய்ய உத்தரவிடுவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது புகார் வந்தால் கட்டப்பஞ்சாயத்து மூலம் பேசி தீர்த்து வைப்பதாக குழந்தைகள் நலக்குழு மீது மகளிர் மற்றும் குழந்தை மேம்பட்டுத்துறை செயலருக்கு சரமாரியாக புகார்கள் சென்றனர். இருப்பினும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் பாயாமல் இருந்தது. இதற்கிடையே சேர்மனின் செயல்பாடு பிடிக்காமல் குழுவில் இருந்து ஒரு உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 இந்நிலையில், புதுச்சேரியில் தந்தையே தனது மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக குழந்தைகள் நலக்குழுவில் அக்குழந்தையின் தாயார் புகார் செய்துள்ளார். இந்த புகாரை விசாரிக்காமல் குழந்தையின் தந்தைக்கு ஆதரவாக நலக்குழு செயல்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த குழந்தையின் தாயார் உரிய ஆதாரங்களுடன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டு துறை செயலரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், குழந்தைகள் நலக்குழு மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. சேர்மன் ராஜேந்திரன் தலைமையிலான குழுவின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. குற்றங்கள் மூடி மறைக்கப்படுகிறது. எனவே, இக்குழுவினரை தகுதி நீக்கம் செய்துவிட்டு, விரைவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயலர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.

Tags : child welfare administrators ,
× RELATED மாற்றுத்திறன் வீராங்கனைகளுக்கு...