×

பலாத்கார வழக்குகளில் அலட்சியம் போலீசை கண்டித்து எஸ்பி ஆபிஸ் முன்பு காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி, மே 21: தர்மபுரி மாவட்ட அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் நம்புராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 2018ல் பதிவு செய்யப்பட்ட 3 மாற்றுத்திறனாளி பெண்கள் அளித்த பாலியல் வழக்குகளில், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் போலீசார் அலட்சியம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மே 1ம் தேதி, பர்வதனஅள்ளியை சேர்ந்த 26 வயது மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை, ஒரு கும்பல் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசி கொலை செய்தனர். இவ்வழக்கில் ஓராண்டாகியும், இதுவரை ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை. கடந்த அக்டோபர் மாதம், ஜக்கம்பட்டியில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளியின் தடயங்களான பாதிக்கப்பட்ட சிறுமியின் உடைகளை போலீசார் தொலைத்து விட்டனர். அதே மாதம், ஜெல்மாரம்பட்டியில் 40 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றார். இதையடுத்து ஊர் பெரியவர்கள் கூடி, பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கே 2வது திருமணம் செய்து வைப்பதாக நிர்பந்தம் செய்து கட்டப்பஞ்சாயத்து செய்தனர். இதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள், குற்றவாளி உள்ளிட்ட யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்குகள் மீதான விசாரணை விபரம் குறித்து, அப்போதைய எஸ்பி பண்டி கங்காதரிடம் கேட்ட போது, 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், இதுவரை 3 வழக்குகளில், எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. எனவே, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், வரும் ஜூன் 4ம் தேதி தர்மபுரி எஸ்பி அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Tags : SP Office ,
× RELATED தருமபுரம் மடத்தை ரவுடிகளிடம் இருந்து...