×

சீரான குடிநீர் வழங்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தர்மபுரி, மே 21: பாப்பாரப்பட்டி பேரூராட்சியில், ஒகேனக்கல் குடிநீர் விநியோகத்தை சீர் செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாப்பாரப்பட்டி பேரூராட்சி 11வது வார்டில் கே.டி.முதலிதெரு, பிள்ளையார் கோயில் தெரு உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இம்மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று 40க்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர் கேட்டு பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில், ‘பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதமாக 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் ஒருகுடும்பத்துக்கு 4 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால், பிற தேவைகளுக்கு குடம் 5 ரூபாய் என விலைக்கு வாங்குகிறோம். எனவே, தினசரி ஒகேனக்கல் குடிநீர் வழங்கவேண்டும்,’ என்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘மின்வெட்டு பிரச்னை இருப்பதால் குடிநீர் தொட்டியில் நீரேற்ற முடியவில்லை. விரைவில் குடிநீர் விநியோகம் சரி செய்யப்படும்,’ என்றனர்.

Tags : Women ,Siege ,Panchayat Office ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ