×

திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அரியலூர், மே 21: திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 1965ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக துவங்கப்பட்டது. 1996ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த பள்ளியில் நேற்று முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை இன்பராணி தலைமை வகித்தார். பள்ளி முன்னாள் மாணவியும், பள்ளி ஆசிரியையுமான செல்வி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சின்னதுரை, முருகானந்தம் முன்னிலை வகித்தனர். ராகவன், சிராஜுதீன் வாழ்த்துரை வழங்கினர். பஞ்சாபிகேசன், வழக்கறிஞர் அருண்மொழி,  புண்ணியமூர்த்தி, திருவேங்கடம் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பலர் பள்ளியில் பயின்ற காலம் குறித்தும், தாங்கள் அடைந்த பல உயரிய பதவிகள் குறித்தும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதைதொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைத்து அதன்மூலம் அனைவரின் பங்களிப்போடு பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னிற்போம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். மேலும் பள்ளியில் நிகழாண்டு முதல் மேல்நிலை வகுப்பில் புதிதாக துவங்கப்பட்டுள்ள வணிகவியல் பாடப்பிரிவில் மாணவர்களை அதிகமாக சேர்க்க ஒத்துழைப்பு வழங்குவதோடு, அந்த பாடப்பிரிவிற்கு மேலும் ௯டுதலான ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்தனர்.

பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 1969 முதல் 1998 ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களான ஆசிரியர்கள், பொறியாளர்கள், வங்கி அலுவலர்கள், சார் பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை, காவல்துறை, தனியார் துறையில் உயர் பதவியில் உள்ளவர்கள், வேளாண் துறை மற்றும் தொழிலதிபர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

Tags : Meeting ,Tirumannur Government Higher Secondary School ,
× RELATED இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்