×

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிளஸ் 1 விடைத்தாள் நகல் கேட்டு 110 பேர் விண்ணப்பம் கல்வித்துறையினர் அதிர்ச்சி

திண்டுக்கல், மே 17: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிளஸ் 1 விடைத்தாள் நகல் கேட்டு 110 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவிகள் அதிகளவு விண்ணப்பித்துள்ளதால் கல்வித்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவு கடந்த மாதம் வெளியானது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, வேடசந்தூர், வத்தலக்குண்டு ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த நான்கு கல்வி மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 22 ஆயிரத்து 71 மாணவ, மாணவிகள் பிளஸ்2 தேர்வு எழுதினர்.

இதில் 20 ஆயிரத்து 39 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். விடைத்தாள்களை பார்த்த பின்னர், 29 பேர் மறு மதிப்பீடு செய்யவும், ஒரு மாணவர் மறு கூட்டலுக்கும் விண்ணப்பித்துள்ளனர். கடந்த வாரம் பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானது.

பிளஸ்1 தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 19 ஆயிரத்து 567 மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். அதில் 19 ஆயிரத்து 216 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து மறு கூட்டல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 110 மாணவ, மாணவிகள் தங்களின் விடைத்தாள்களின் நகலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மறு கூட்டல் செய்யும்படி 7 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதை தொடர்ந்து நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்களை கல்வித்துறை அதிகாரிகள் சென்னைக்கு அனுப்பிவைக்க உள்ளனர். அங்கு விடைத்தாள்களின் நகல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பின்பு மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, விடைத்தாள்களை சரி பார்க்கலாம். அதில் எதிர்பார்த்ததைவிட மதிப்பெண் குறைவாக இருப்பது தெரியவந்தால், மறுமதிப்பீடு செய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Dindigul district ,academics ,
× RELATED திறந்தவெளி கிணற்றில் ஆட்டோ பாய்ந்து டிரைவர், பயணி பலி: வடமதுரை அருகே சோகம்