×

சந்தனாதி தைலம் காய்ச்சும் நிகழ்வு துவங்கியது

தென்காசி, மே 17: குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவில் பாடல் பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடத்தக்கது. பஞ்ச சபைகளான பொற்சபை, கனகசபை, வெள்ளியம்பலம் உள்ளிட்டவற்றில் சித்திரசபையை தன்னகத்தே கொண்டது குற்றாலம் கோயில். மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்த இக்கோயிலில் சிவனுக்கு தினமும் காலை, மாலையில் சந்தனாதி தைலம் வைத்து அபிஷேகம் செய்வது வழக்கம்.

68 லிட்டர் நல்லெண்ணெய், இளநீர், பால் மற்றும் 51 வகை மூலிகைகளை நான்கு மாதம் அடுப்பில் வைத்து காய்ச்சப்படுகிறது. இந்த நிகழ்வு நேற்று துவங்கியது. நான்கு மாத முடிவில் அதில் இடப்படும் பொருட்களின் சத்துக்கள் அனைத்தும் எண்ணெயில் இறங்கிவிடுகிறது. இதனை நாளொன்றுக்கு 175 மில்லி வீதம் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இதிலிருந்து 100 மில்லி மட்டுமே பின்னர் சிலையிலிருந்து வழித்து எடுக்கப்படும். இதனை பக்தர்களுக்கு விலைக்கும் விற்கப்படுகிறது. தைலம் காய்ச்சுவதற்கு ஆகும் ஒட்டு மொத்த செலவை கணக்கிட்டு இதற்கான விலையை அறநிலையத்துறை ஆணையர் நிர்ணயம் செய்கிறார். இந்நிகழ்வில் கோயில் நிர்வாக அதிகாரி செல்வகுமாரி மற்றும் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை