×

அரியலூர் அருகே ஏரியை மீட்டு தரக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்

அரியலூர், மே 16: அரியலூர் அருகே தனியார் சிமென்ட் ஆலை நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட  வீராணி ஏரியை மீட்டுத்தரக் கோரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகிலுள்ள பெரியநாகலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சின்னநாகலூர் கிராமத்தில் அமைந்துள்ள 6.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீராணி ஏரியை தனியார் சிமெண்ட் ஆலைநிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. நீர் நிலைகளை ஆக்கிரமித்ததோடு அல்லாமல் 60 அடி உயரத்திற்கு சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை குவியலாக கொட்டி ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.  ஏரியினை மீட்டுத்தரவேண்டும். மேலும் நீரோடை ஒன்றையும் ஆக்கிரமித்து அதில் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது, அதனையும் மீட்டு 100 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் பாசனம் செய்ய வசதியாய் இருந்த ஏரியை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி சிமென்ட் ஆலை கொட்டிவைத்துள்ள மண் மேட்டில் ஏறி மலர் வளையம் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காடு வளர்ப்பு என்ற பெயரிலும் தனியார் சிமெண்ட் ஆலை நிறுவனம் வீராணி ஏரியை ஆக்கிரமித்து விவசாயிகளை ஏமாற்றி வருகிறது என குற்றஞ்சாட்டுகின்றனர். இவர்கள் காடு வளர்க்க வேண்டிய இடத்தில் வளர்க்கட்டும், ஏரியை எங்களுக்கு திருப்பித்தர  நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரி குளங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
30 நாட்களுக்குள் ஏரியை புனரமைக்காவிட்டால் அனைத்து விவசாய சங்க தலைவர்களை சந்தித்து மாவட்டதலைநகரில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் வராத காரணத்தால் அங்கேயே காத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் தாசில்தார் கதிரவன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து 20 ஆண்டுகளாக தனியார் சிமெண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வீராணி ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இப்போராட்டத்திற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்ட தலைவர் மூ.மணியன், பெரிய நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறிவழகன், ராஜேந்திரன், கோடிசுவரன், ராமசாமி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags : Ariyalur ,lake ,lake farmers ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...