×

எக்ஸல் கல்லூரியில் சேப்டி பயர் இன்ஜினியரிங் படிப்பு துவக்கம்

குமாரபாளையம், மே 15: தமிழகத்தில் முதல்முறையாக ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் முறையான அங்கீகாரத்தோடு குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் சேப்டி அண்டு பயர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு நடப்பாண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது. புதிய பட்டப்படிப்பு குறித்து எக்ஸல் கல்வி குழுமங்களின் துணைத்தலைவர் டாக்டர் மதன்கார்த்திக் கூறியது: தொழிற்சாலைகள், கட்டுமானநிறுவனங்கள், எரிவாயு மற்றும் எண்ணை நிறுவனங்கள், பாய்லர் தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி நிறுவனங்களில் பாதுகாப்பு அதிகாரியாகவும், தொழிற்கூட பாதுகாப்பு ஆலோசகராக தனித்து செயல்படவும், இந்த நான்கு வருட பொறியியல் படிப்பு தேவைப்படுகிறது.

தீ விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள், விபத்து காலத்தில் மனிதர்களின் போக்கு, விபத்தின் விளைவுகள், விபத்தை தடுக்கும் கருவிகள், உபகரணங்கள், தீயணைப்பு சாதனங்கள் போன்ற அனைத்தும் இந்த துறையுடன் தொடர்புடையவை. தொழிற்சாலைகளில் உபகரணங்களை கையாளுதல், பாதுகாப்பு விதிமுறைகள் போன்றவற்றை அறிந்து அதற்கேற்ப செயல் படுவதற்கான பாடத்திட்டங்கள் இதில் கற்பிக்கப்படுகிறது. வேதியியல், இயற்பியல், கணிதம் படித்த 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

இந்த பட்டப்படிப்பை பயின்றவர்கள் மத்திய அரசின் நவரத்னா எனப்படும் பெரிய நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம். கல்வி நிறுவனங்கள், கன்சல்டிங் நிறுவனங்கள், பெரிய உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய கிணறுகள், டெக்ஸ்டைல் துறை, இயற்கை விவசாயத்துறை, வேதிப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், கொதிகலன் தொழிற்சாலைகள், இரும்பாலைகள், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள், விமான எரிபொருள் தொடர்பான உற்பத்தி துறைகளில் வேலைவாய்ப்பினை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Excel College ,
× RELATED ஐஇஐ மாணவர்களின் அத்தியாயத்தின் தொடக்க விழா