×

தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி வழிப்பறி

புதுச்சேரி, மே 14: சேதராப்பட்டு அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பெயிண்டர், சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரிஷிகேஷ் சாகு(43). புதுவை, சேதராப்பட்டில் உள்ள தனியார் இரும்பு கம்பெனியில் பியூனாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 11ம்தேதி இரவு பணி முடிந்து அப்பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கரசூர் ஏரிக்கரை ரோட்டில் வந்தபோது பைக்கில் வழிமறித்த 2 நபர்கள் அவரை கத்தியால் குத்தியும், மிரட்டியும் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து தலைமறைவாகி விட்டனர். இதில் காயமடைந்த அவரை சக ஊழியர்கள் காப்பாற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சேதராப்பட்டு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ரிஷிகேஷ் சாகுவிடம் விசாரித்தனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், 3 மாதங்களுக்கு முன்பு தனது கம்பெனியில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டவர்களைப்போல் இருந்ததாக சில அடையாளங்களை அவர் கூறவே, அந்த ஒப்பந்ததாரர் மூலம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

 இதில் துப்பு துலங்கியது. இதன் அடிப்படையில் லாஸ்பேட்டை, சாமிபிள்ளை தோட்டம், வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்த ஹேமந்த்குமாரை(21) அதிரடியாக கைது செய்தனர். மேலும் வழிப்பறிக்கு உடந்தையாக இருந்த ஒரு சிறுவனும் பிடிபட்டார். அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் பணம், செல்போன், பைக், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஹேமந்த்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவன் அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். பெயிண்டர்களான இருவரும் தனியார் கம்பெனியில் பெயிண்டிங் வேலைக்கு சென்றபோது ரிஷிகேஷ் சாகுவிடம் அவ்வப்போது பணப்புழக்கம் இருப்பதை நோட்டமிட்டுள்ளனர். தற்போது வேலையில்லாமல் செலவுக்கு திண்டாடிய இவரும் அவரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : company ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...