×

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகளுக்கு வராண்டாவில் சிகிச்சை கோடை வெயில், கொசுக்கடியால் அவதி

கும்பகோணம், மே 14: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் வராண்டாவில் தங்கி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்போது கோடை வெயில், கொசுக்கடியால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவு, 24 மணி நேர தாய்சேய் நலப்பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, எலும்பு முறிவு பிரிவு, கண், பல், பால்வினை நோய் பிரிவு, ரத்த வங்கி, தீப்புண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு தனித்தனியாக சிகிச்சை பிரிவுள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 3,000 நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதில் தினமும் 400 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதம்தோறும் 200 சிசேரியன் அறுவை சிகிச்சை, 350 இதர பொது அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.

 
2006ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரின் நிதியில் அவசர சிகிச்சைக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதேபோல் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் 2014ம் ஆண்டு நவீன மயமாக்கப்பட்ட வகையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் மருத்துவத்துறை சார்பில் மாடி பகுதிகள் கட்டப்பட்டது. இதனால் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து கூடுதலாக உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான கட்டிடத்தில் போதுமான படுக்கைகள் இல்லாததால் 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனை வராண்டாவில் படுத்து கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வராண்டாவில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சோழபுரத்தை சேர்ந்த நோயாளி கூறுகையில், கும்பகோணம் மருத்துவமனையில் ஏராளமானோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் போதுமான கட்டிடங்களும், படுக்கை வசதி இல்லாததால் எங்களை போன்று ஏராளமான பெண்கள், முதியவர்கள் வராண்டாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறோம். இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லையாலும், பகலில் வெயிலின் தாக்கத்தால் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகிறோம். இதுகுறித்து மருத்துவமனை அலுவலர்களிடம் கூறினால் ஒரே படுக்கையில் இருவரை படுக்க சொல்கிறார். எனவே அரசு மருத்துவமனைக்கு போதுமான கட்டிடங்கள் கட்டுவதுடன், கூடுதலாக படுக்கை வசதி செய்துதர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumbakonam ,government hospital ,bed facilities ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...