×

மணமேல்குடி அருகே கட்டுமாவடி கடலில் பவள பாசிகளை அள்ளுவதால் உயிரினங்கள் அழியும் அவலம் தடுத்து நிறுத்த மீனவர்கள் கோரிக்கை

மணமேல்குடி, மே 14: கட்டுமாவடி கடற்கரையில் பவள பாசிகள் டன்  கணக்கில் அள்ளப்படுவதால் கடல் உயிரினங்கள் அழிந்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கடல் பாசிகள் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் என்பது
கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளது. எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.

இந்த நாட்களில், சென்னை முதல் கன்னியாகுமாரி வரை மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடி தடைக்காலமானது 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக கடல்பகுதிகளில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும்  குறைந்த ஆழத்தில்  கடலின் மேற்பரப்பில் விரிக்கப்படும்  நண்டு வலை, செங்கனி வலை, முரல்வலை, கணவாய் தூண்டில் ஆகியவற்றை பயன்படுத்தி மட்டும் மீன்பிடிக்க அனுமதி உள்ளது. ஆனால் தரைப்பகுதியை அரிக்கக் கூடிய மடி வலைகளுக்கு  அனுமதி இல்லை. இந்த மீன்பிடி  தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகளையும், நாட்டுப் படகுகளையும் பராமரிக்கும் பணிகளிலும், வலைபின்னுதல், கிழிந்த மடிவலைகளை சரிசெய்தல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான 5000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும், 1500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் வேலை இழந்துள்ளனர்.


பவளப்பாசி: தற்போது  வேலையிழந்த கட்டுமாவடியை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு சென்று பாசிகளை அள்ளுகின்றனர். இந்த பாசிகளை வியாபாரிகளிடம் விற்று அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். கடல்பாசிகளில் பல வகைகள் உள்ளன. இதில் 3 வகையான கடல் பாசிகள் கட்டுமாவடி கடற்பகுதியில் காணப்படுகிறது. இதில் பவளப்பாசிகள் பெரும்பாலும் பவளப்பாறை பகுதிகளில் காணப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமாவடி கடலிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அரசால் பவளப்பாறைகள் இடப்பட்டன. இந்த பாசிகள் கட்டுமாவடி கடலின் அதிகமான பகுதிகளில் காணப்படுகிறது.

இந்த கடல் பாசியிலிருந்து  250க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக உணவு, உரம், மருந்து, குளிர்பானம், அழகுசாதனம், மூலிகைப் பொருட்கள், மருந்து, வாசனைத் திரவியங்கள், பல்பொடி, ஜெல்லிமிட்டாய் போன்றவற்றில் இந்த வகை பாசி பயன்படுத்தப்படுகின்றது.   இப்பாசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலக சந்தையில் தேவை  அதிகரித்துக்கொண்டே போகின்றது. தேவைக்கு ஏற்ற அளவு உற்பத்தி இல்லாததால் பாசியின் விலையும் கூடுகின்றது. தூத்துக்குடி கடல் பகுதிகளில் செயற்கையாக பாசி வளர்க்கப்பட்டு 60 முதல் 90 நாட்களில் பிரித்தெடுக்கப்பட்டு அதை பல அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால் கட்டுமாவடியில் இருக்கக்கூடிய இந்த பாசி இயற்கையான பாசி ஆகும். இந்த பாசியில்தான் மீன் இனங்கள் முட்டை இட்டு அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கின்றன. இந்தப் பவளப் பாசிகள் தினமும் டன் கணக்கில் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. ஒரு படகில் மட்டும் ஒரு டன் அளவுக்கு பாசிகள் அள்ளப்படுகிறது. இதேபோன்று தினமும் 30 க்கும் மேற்பட்ட படகின் மூலம் 30 டன் அளவுக்கு மேற்பட்ட அளவு பாசிகள் அள்ளப்படுகின்றன. ஏற்கனவே  ஓரா, கடல் குதிரை போன்ற உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது போன்று இன்னும் சில மீன் இனங்கள் அழியும் தருவாயில் உள்ளது. இந்த பாசியினங்கள் அழிவதால் கடலில் மீன் இனமே இருக்காது என்று மீனவர்கள் கூறுகின்றனர்.  இந்த பாசிகள் அழிந்தால் மீண்டும் பாசிகள் வளர்ந்து வருவது கடினம். இந்த பாசிகள் மூலம் சில வியாபாரிகள் பெரும் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் கடலிலோ உயிரினங்கள் அழிக்கப்படுகிறது. ஒரு படகில் கொண்டுவரப்படும் ஒரு டன் பாசியானது 3000 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி அதை கூடுதல் விலைக்கு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். எனவே கடல்பாசிகள் அழிந்து வருவதை தடுத்து, கடல்பாசி வளர்ச்சியை ஊக்குவித்து, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே மீனவர்களும் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த மீனவர் கூட்டுறவு சங்க (தாட்கோ) பிரதிநிதியும், கட்டுமாவடி கடலோர மீனவர் கூட்டுறவு சங்க தலைவருமான பசுபதி கூறுகையில் “கட்டுமாவடி பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் மீனவர்களிடம் இருந்து கடல் பாசிகளை பெறப்பட்டு அதை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மீன்பிடி தடை காலத்தால் வேலை இழந்த பெரும்பாலான மீனவர்கள் கடல் பாசிகளை அள்ளுவதற்காக கடலுக்குச் சென்று டன் கணக்கில் எடுத்து அதை வியாபாரிகளிடம் கொடுத்து பணம் சம்பாதிக்கின்றனர். அந்த வியாபாரிகள் கடல் பாசிகளை காயவைத்து அதை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால் இந்த பாசிகள்  அள்ளப்படுவதால் மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடுகிறது. அரசாங்கம் மீன்பிடி தடைக்காலம் ஏற்படுத்தி  இருப்பதன் நோக்கம் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கத்தான். ஆனால் கட்டுமாவடி பகுதிகளில்  கடல் பாசிகள் அழிவதால் மீன்களின் இனப்பெருக்கம் அழிவதோடு மீன்களின் வரத்து குறைந்து விடும். தற்போது கட்டுமாவடி கடல் பகுதிகளில் மீன்களின் வரத்து குறைந்து இருக்கின்றது. மற்ற பகுதிகளில் மீன் வரத்து அதிகரித்து காணப்படு கிறது. இந்த கடல் பாசிகள் அள்ளப்படுவதை தடுக்க மணமேல்குடி மீன்வளத் துறை அலுவலர்களிடம் கடந்த மாதம் புகார் செய்தேன். அவர்களும் வந்து ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர். தேர்தல் நேரமாக இருந்ததால் அவர்கள் வரவில்லை. தேர்தல் முடிந்து இதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்போம். அதற்கும் தீர்வு ஏற்படாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்” என்றும் அவர் கூறினார்.

Tags : fishermen ,river ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...