×

கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த நாய்க்குட்டிகளை காப்பாற்றிய வீரர்களுக்கு பாராட்டு

 

கந்தர்வகோட்டை, ஏப்.24: கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த நாய்க்குட்டிகளை காப்பாற்றிய வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள கணபதிபுரம் கிராமத்தில் 40 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் நான்கு நாய்க்குட்டிகள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சென்னை தீ தடுப்பு கட்டுபாட்டு அறையின் வாயிலாக கணபதிபுரத்தை கணேசன் மகன் ராஜ்குமார் என்பவர் உதவிக் கேட்டுள்ளார்.

இது குறித்து தகவல் பெற்ற கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சிவகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 40 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத கிணற்றில் நான்கு பச்சிளம் நாய் குட்டிகளை அதன் தாயிடம் இருந்து பிரித்து சென்று கிணற்றில் வீசப்பட்டு இருந்தது.

உடனே தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி நாய்குட்டிகளை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைதனர். மேலும் அப்பகுதி மக்களிடம் இது போன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். உயிருக்கு போராடிய நாய்க்குட்டிகளை மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி கிராம பொதுமக்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த நாய்க்குட்டிகளை காப்பாற்றிய வீரர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Gandharvakota ,Gandharvakot ,Pudukottai District ,Ganapathipuram ,Kandarvakottai ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டையில் முந்திரி விளைச்சல் துவங்கியது