×

தர்மபுரி அருகே ஒகேனக்கல் குடிநீர் கேட்டு ஒப்பாரி வைத்து போராட்டம்

தர்மபுரி, மே 10: தர்மபுரி அருகே ஒகேனக்கல் குடிநீர் கேட்டு ஒப்பாரி வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம் குப்பூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னகுரும்பட்டி கொட்டாய் மேடு கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடு-மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு கொட்டாய் மேட்டில் பாதுகாக்கப்பட்ட, ஒகேனக்கல் குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. ஆனால், முறையாக குடிநீர் சப்ளை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, குடிநீர் சப்ளை செய்வதற்காக மேல்நிலை தொட்டி அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதில் இருந்து ஒரு நாள் மட்டும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது. அதன் பின்பு பழுது காரணமாக தண்ணீர் ஏற்றவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2 வருடங்களாக ஒகேனக்கல் குடிநீரும் முறையாக வழங்கப்படாத நிலையில், ஊராட்சி சார்பில் வழங்கப்படும் ஆழ்துளை கிணற்று நீரும் கிடைக்காததால் கிராம மக்கள் பரிதவித்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளாததை கண்டித்தும், ஒகேனக்கல் குடிநீர் கேட்டும் நேற்று கிராம மக்கள் மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே திரண்டனர். பின்னர், ஒன்றாக கூடி அனைவரும் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.  

இதுகுறித்து கொட்டாய் மேடு கிராமத்தைச் சேர்ந்த சத்யா கூறியதாவது: சின்னகுரும்பட்டி கொட்டாய்மேடு கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டி 2 ஆண்டுகளாகியும், குடிநீர் ஏற்றப்படவில்லை. இதுகுறித்து குப்பூர் ஊராட்சி செயலாளரிடம் கேட்டால், கொட்டாய் மேடு கிராமம் ஒகேனக்கல் திட்டத்திற்குள் வரவில்லை. அதனால் ஒகேனக்கல் குடிநீர் வழங்க முடியாது என கூறுகிறார். எங்களது கிராமத்திற்கு ஏரி வேலையும் தரமறுக்கின்றனர். இதுகுறித்து கேட்டால், உங்களது பட்டா நிலத்திலேயே வேலை செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். வீட்டுவரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் கட்டுகிறோம். ஆனால், ஒகேனக்கல் குடிநீர் தர மறுக்கின்றனர். பலமுறை பிடிஓ அலுவலகத்திலும் முறையிட்டு விட்டோம். மனுநீதி நாள் முகாமின்போது கலெக்டரிடமும் புகார் மனு கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அனைத்து வீடுகளிலும் கால்நடைகளை வளர்த்து வருகிறோம். ஒரு வீட்டிற்கு 50 குடம் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால், அதிகாலை 2 மணிக்கு எழுந்து, 5 கிலோ மீட்டர் வரை சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். குடிநீர் தட்டுப்பாட்டால், எங்கள் ஊரில் நடக்கும் மாரியம்மன் கோயில் விழாவிற்கு கூட உறவினர்களை அழைக்க முடிய வில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து குப்பூர் மெயின்ரோட்டிற்கு செல்ல உரிய சாலை வசதி இல்லை. இதனால், விவசாய நிலங்கள் வழியாகவே செல்கிறோம். தெரு விளக்குகள் கூட இதுவரை அமைக்கவில்லை. எங்களது சொந்த செலவில் வீட்டிற்கு ₹10 ஆயிரம் பணம் சேகரித்து சாலை அமைத்துள்ளோம். எங்களது ஊர் குப்பூர் ஊராட்சியிலேயே இல்லை என கூறுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : Hogenakkal ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி