×

பூந்தமல்லி தொகுதி மேட்டுப்பாளையத்தில் 195ம் எண் வாக்குச்சாவடியில் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் உத்தரவு

திருவள்ளூர்: திருவள்ளூர் எம்பி தொகுதியில், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில், 195ம் எண் வாக்குச்சாவடியில் வரும் 19ம் தேதியன்று மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மாதம் 18ம் தேதியன்று வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் 195ம் எண் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவின்போது குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என திமுக, அதிமுகவினர் கூறி வந்தனர். இதையடுத்து, அங்கு மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் 195ம் எண் வாக்குச்சாவடியான துவக்கப்பள்ளியில், நடந்த வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டு, மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்கு சாவடியில் மறு வாக்குப் பதிவு, வரும் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்படும். வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் மொத்தம், 1,117 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச் சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக்ள்ளப்படுகின்றனர். அங்குள்ள வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கு, சட்டமன்றத்துக்கு என இரு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறினார்.

முன்னதாக மறு வாக்குப்பதிவு குறித்த முன்னேற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, காணொளி காட்சி வாயிலாக மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மறு வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபிஏடி இயந்திரங்கள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அப்போது, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : constituency ,Poonthamalli ,voting ,Mettupalayam ,Election Commission ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...