×

பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி காங். வேட்பாளர் மாயம்: தேர்தல் ஆணையத்திடம் புகார்

*பா.ஜவில் சேரப்போவதாக தகவல், வீடு முன்பு தொண்டர்கள் முற்றுகை

சூரத்: சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாயமாகி விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பா.ஜவில் சேரப்போவதாக வெளியான தகவலால் அவரது வீட்டு முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி 3ம் கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். அப்போது சூரத் மக்களவை தொகுதியில் பா.ஜ வேட்பாளர் முகேஷ் தலாலை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த அத்தனை வேட்பாளர்களும் மனுக்களை வாபஸ் பெற்று விட்டனர்.

முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி, மாற்று காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் பட்சலா ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இருவரது மனுவையும் முன்மொழித்த 4 பேரின் கையெழுத்து தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதையடுத்து பாஜவின் முகேஷ் தலால் போட்டியின்றி சூரத் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரி சவுரப் பாரதியால் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலேஷ்கும்பானியை கடந்த 3நாட்களாக காணவில்லை. அவர் பா.ஜவில் சேரப்போவதாக அங்கு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் நிலேஷ்கும்பானி வீடுமுன்பு குவிந்தனர். அவரது வீடு பூட்டப்பட்டு உள்ளது. அவரது வீட்டுக்கு வெளியே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் துரோகி என்று எழுதப்பட்ட பேனர்களுடன் ஏராளமான தொண்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே சூரத் மக்களவை தொகுதியில் ஆளும் பாஜ தவறான மற்றும் தேவையற்ற செல்வாக்கை செலுத்தியதாகக் குற்றம் சாட்டி, தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. சூரத் தொகுதி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, அங்கு மீண்டும் தேர்தல் பணியை தொடங்க காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், சூரத் தேர்தலை ஒத்திவைத்து, தேர்தலை மீண்டும் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

சூரத் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனுவை முன்மொழிந்த 4 பேரும் திடீரென்று தங்கள் கையெழுத்தை மறுத்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியை பல மணிநேரம் காணவில்லை. அதற்குள் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுவை வாபஸ் பெற்று விட்டனர். அங்கு நடந்து இருப்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்’ என்றார்.

நடந்தது என்ன?
* ஏப்ரல் 18: சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு தாக்கல் செய்தார்.

* ஏப்ரல் 19: பா.ஜ ஊழியர் தினேஷ் ஜோதானி, காங்கிரஸ் வேட்பாளர் கும்பானியின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியானது என்று குற்றம் சாட்டினார்.

* ஏப்ரல் 20: கும்பானி வேட்புமனுவில் உள்ள கையெழுத்து தங்களுடையது அல்ல என்று கூறி, முன்மொழிந்தவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததால் இதுகுறித்து கும்பானி விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

*ஏப்ரல் 21: நிலேஷ் கும்பானி மற்றும் வேட்புமனுவில் கையெழுத்து போட்டவர்கள் வராததால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரி ரத்து செய்தார்.

* ஏப்ரல் 22: சூரத் மக்களவை தொகுதியில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் உட்பட 8 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து பாஜ வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

The post பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி காங். வேட்பாளர் மாயம்: தேர்தல் ஆணையத்திடம் புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Election ,Commission ,Congress ,Gujarat ,Surat Constituency Cong ,Election Commission ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...