×

உளுந்து பயிர்களை தாக்கும் புரோடினியா புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

மன்னார்குடி, மே 9: வடுவூர் சாத்தனூர், மேலவாசல் கிராமங்களில் உளுந்து வயல்களில் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு புரோடினியா புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். திருவாரூர் மாவட்டம் வடுவூர் சாத்தனூர், மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது சித்திரை பட்டத்தில் சாகுடி செய்யப்பட்டுள்ள உளுந்து வயல்களில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் முனைவர் ராஜாரமேஷ் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் பேராசிரியர் இராஜா ரமேஷ் கூறியதாவது: புரோடினியா புழுவானது இலைகளையும், பூ மொட்டுகளையும், காய்களையும் தின்று சேதப்படுத்தும். இப்புழுவின் தாக்குதல் இரவு நேரங்களில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் புழுக்கள் மண் வெடிப்புகளிலும், சருகுகளின் அடியிலும் அறுவடை செய்யப்பட்டட நெற்பயிரின் அடித்தூர்களில் பதுங்கி இருக்கும். இதன் அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறமாகவும், வெள்ளைநிற கோடுகளுடனும்,  பின் இறக்கை பழுப்பு நிறமாகவும், பழுப்பு நிறதிட்டுகளுடனும் காணப்படும். ஒரு பெண் அந்துப்பூச்சி 200 முதல் 300 முட்டைகள் வரை இலைகளின் மேற்பரப்பில் குவியலாக இட்டு தன் உடம்பில் உள்ள செதில்களால் மூடி வைத்திருக்கும்.  

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்:
இப்பூச்சியின் முட்டைக் குவியலையும், முட்டையில் இருந்து பொரித்து கூட்டமாக மேயும் வளர்நிலை புழுக்களையும் சேகரித்து அழிக்க ஊதா அல்லது கறுப்பு நிற துணிகள் அல்லது கிழிந்த சாக்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டி காலை வேளையில் ஆங்காங்கே வைக்க வேண்டும். புரோடினியா புழுக்கள் இருட்டைத்தேடி இத்துணிக்குள் வந்தடையும். அப்பொழுது புழுக்களை சேகரித்து அழிக்கலாம். விளக்கு பொறிகளைப் பயன்படுத்தி இவற்றின் தாக்குதலை முன்னறியலாம். மேலும் அதில் கவரப்படும் வளர்ந்த அந்துப்பூச்சிகளை அழித்துவிடலாம். இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைத்து ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பைரிபாஸ் 20 இசி - 500 மிலி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத் தெளிப்பான் கொண்டு தெளித்து  கட்டுப்படுத்தலாம். புரோடினியா புழுவின் தாக்குதல் அதிகளவில் காணப்பட்டால் மகசூல் பாதிப்படைடையும்.  எனவே விவசாயிகள் இதன் தாக்குதலை முன்னறிந்து தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையான வேண்டும் எனக்கூறினார். பயிற்சி உதவியாளர் முனைவர் ராஜேஷ்குமார் உடனிருந்தார்.

Tags : Broodnia ,attack ,
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது