×

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணியில் தரமில்லை சீரமைத்த மூடி மீண்டும் உடைந்தது

திண்டுக்கல், மே 8: திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி தரமில்லாமல் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.திண்டுக்கல் நகரின் பல இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடியாமல் உள்ளது. பணிகள் முடிந்த இடங்களில் தரமான கட்டுமானம் இல்லையென பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடைக்காக போடப்பட்டுள்ள சிமெண்ட் மூடிகள் மீது பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்கள் ஏறி செல்லும் போது உடைந்து விடுகிறது. இந்த உடைந்த பள்ளத்தில் அவ்வழியே டூவீலரில் செல்பவர்கள் சிக்கி கீழே விழுந்து காயமுறுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘திண்டுக்கல் நகர் முழுவதும் பாதாள சாக்கடை சிமெண்ட் மூடி உடைந்துள்ளது. இதனை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் டூவீலரில் செல்பவர்கள் இரவு மட்டுமல்லாது பகலிலலே பள்ளங்களில் சிக்கி விழுந்து காயமடைகின்றனர். 108 விநாயகர் கோயில் அருகே உடைந்த பாதாள சாக்கடை சிமெண்ட் மூடியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் மறுபடியும் கட்டினர். தற்போது அது மீண்டும் உடைந்து விட்டது. இப்படி தரமில்லாத பணி மூலம் அரசு பணத்தை மாநகராட்சி நிர்வாகம் அழிக்கிறது. எனவே மாவட்டநிர்வாகம் தலையிட்டு பாதாள சாக்கடை பணிகளை தரமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED வத்தலக்குண்டுவில் அரசு மருத்துவமனையை...