×

தபால் ஓட்டு போட முடியாமல் ஆசிரியர்கள் ஏமாற்றம்

தர்மபுரி, மே 8: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்களை தபால் வாக்களிக்க வாய்ப்பளிக்காமல் அலைக்கழிப்பதற்கு, பென்னாகரம் திமுக எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பென்னாகரம் தொகுதி திமுக எம்எல்ஏ இன்பசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி நடாளுமன்ற தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி முகாம்களை நடத்தியபோது, அம்முகாம்களில் பங்கேற்ற அனைவருக்கும் தேர்தல் பணிச்சான்றும், வாக்கு சீட்டும் வழங்கப்படவில்லை.

 மேலும் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அஞ்சல் முலமாக கூட பெரும்பாலானோருக்கு, வாக்கு சீட்டு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரை சந்தித்து முறையிடவும் அனுமதி கிடைக்கவில்லை. தேர்தல் பணியாற்றிவர்களுக்கு, வாக்களிக்க வாய்ப்பளிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

வாக்காளர்கள் தங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்ய வேண்டியது, அவர்களது ஜனநாயகக் கடமை என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மற்றும் விளம்பர தூதுவர்கள் மூலம் பிரச்சாரம் செய்யும் தேர்தல் ஆணையம், தனக்கு கீழ் பணியாற்றிவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே அனைவருக்கும் தபால் வாக்குகள் சென்று சேர்ந்ததா என ஆராய்ந்து விடுபட்டவர்களுக்கு, அவ்வாக்கு சீட்டுகளை அனுப்பி வைத்து, அவர்களது ஜனநாயக கடமையை ஆற்றிட தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : authors ,
× RELATED உலகளாவிய நாவல்களில் ஆர்.கே.நாராயண்,...