×

பாலக்கோடு அருகே குடிநீர் திட்ட பணி முடிக்காமல் கணக்கு காட்டிய அதிகாரிகள்

பாலக்கோடு மே 8: பாலக்கோடு அருகே தாசனஹள்ளி கிராமத்தில், குடிநீர் திட்ட பணிகளை முழுமையாக முடிக்காமல், முடித்ததாக கணக்கு காட்டிய அதிகாரிகள் குறித்து,  முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட பதில் மனு தெரிய வந்ததால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட தண்டுகாரனஹள்ளி ஊராட்சி தாசனஹள்ளி கிராமத்தில் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 20வருடங்களுக்கு முன்பு, ₹3.79லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கை பம்பும், மின் மோட்டார் இல்லாத 1500லிட்டர் கொள்ளவு கொண்ட 2 சிண்டெக்ஸ் டேங்கும் அமைக்கப்பட்டது.

ஊராட்சியில் பல கிராமங்களில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் பதித்து குடிநீர் விநியோகம் செய்து வரும் நிலையில், தாசனஹள்ளி கிராமத்திற்கு இதுவரை குடிநீர் குழாய் பதிக்கவில்லை. இந்நிலையில் 2 கைபம்பிலும் தண்ணீர் வற்றியதால் பயன்பாடின்றி உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் தேவைக்காக, 2கி.மீ தொலைவில் உள்ள கருக்கனஅள்ளி கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்னை குறித்து ஊராட்சி செயலாளர் பவுன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம், மக்கள் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து முதலமைச்சரின் தனிபிரிவுக்கு விளக்கம் கேட்டு, கிராம மக்கள் புகார் மனு அனுப்பினர். அதற்கான பதில் மனு முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து வந்தது. அதில், தாசனஹள்ளி கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 ஆழ்துளை கிணறு மற்றும் தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய இருவரும் இணைந்து செய்யாத ஒரு திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக, அரசுக்கு பொய்யான தகவல்களை பதிவு செய்து பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், தாசனஹள்ளி கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் குழாய் அமைத்து சீரான முறையில், குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தீர்வு கிடைக்காவிட்டால், கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : completion ,drinking water project ,Balakode ,
× RELATED மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு