×

கடற்கரை காந்தி திடல் நினைவு தூண் சேதம்

புதுச்சேரி, மே 7:   புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே உள்ள பழங்கால நினைவு தூண் சேதம் அடைந்துள்ளதால், அதை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் அமைந்திருப்பதோடு, பாரம்பரியம் பேசும் பழங்கால நினைவு சின்னங்களும் அதிகளவில் உள்ளன. குறிப்பாக புதுவை கடற்கரையையொட்டியே பல நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன. பழைய துறைமுக பாலம், பழைய கலங்கரை விளக்கம், வெள்ளையர்கள் ஆண்ட அரசு கட்டிடங்கள், அவர்கள் வாழ்ந்த பிரமாண்டமான வீடுகள் என நீளும் வரிசையில் காந்தி திடலில் உள்ள நினைவு தூணும் அடங்கும்.

பிரெஞ்சு காலத்தில் பிரிட்டிஷ் படையுடன் பிரெஞ்சு அரசு பல காலங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களை கைப்பற்றியும் உள்ளது. அதுபோல செஞ்சி நகரத்தை கைப்பற்றியபோது, அங்கிருந்த பழங்கால நினைவு சின்னங்கள் புதுவைக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றில் அழகிய உருவங்கள் பொறித்த கல்லால் ஆன நினைவு தூண்களும் புதுவைக்கு கொண்டுவரப்பட்டு, காந்தி திடலில் இன்று அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

முதலில் இந்த தூண்களுக்கு நடுவே பிரெஞ்சு கால கவர்னர் டூப்ளக்ஸ் சிலை இருந்தது. புதுச்சேரி சுதந்திரம் அடைந்து, இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, டூப்ளக்ஸ் சிலை பழைய துறைமுகம் அருகே கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டது. அந்த சிலை இருந்த இடத்தில் காந்தி சிலை நிறுவப்பட்டது. இப்போது காந்தி சிலை உள்ள காந்தி திடலுக்கு கூடுதல் அழகு சேர்ப்பவையாக இந்த நினைவுத்தூண்கள் விளங்குகின்றன.

இந்நிலையில் இங்குள்ள 8 தூண்களில் ஒரு தூணின் தலைப்பகுதி சேதம் அடைந்த நிலையில் உள்ளன. தூணை பராமரித்து வரும் பொதுப்பணித்துறையின் சிறப்பு கட்டிடப்பிரிவு இதனை கண்டறிந்து, சரிசெய்யும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக சேதம் அடைந்த தூணை சுற்றி தடுப்பு அமைத்து பணிகளை துவக்க ஆயத்த பணியில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த தூண் மிகவும் பழங்கால தூணாக விளங்குகிறது. தொடர்ந்து வீசும் கடலின் உப்புக்காற்று உள்ளிட்ட காரணங்களால் தூணின் தலைப்பகுதி விரிசல் அடைந்துள்ளது. இதை கண்டறிந்து சரிசெய்யும் பணியில் இறங்கியுள்ளோம். இது பழங்கால நினைவுச்சின்னம் என்பதால், பழமை மாறாமல் பாதிப்பை சரிசெய்ய இருக்கிறோம். இதேபோல மற்ற தூண்களில் பாதிப்பு உள்ளதா என கண்டறிந்து அதையும் சரிசெய்ய உள்ளோம் என்றனர்.

Tags : Gandhi Tydal ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...