×

மஞ்சவாடி கணவாய் வனப்பகுதியில் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் மனிதச்சங்கிலி அரண்

சேலம், மே 7: சேலம் அருகே 8வழிச்சாலைக்கு தேர்வு செய்யப்பட்ட வனப்குதியில் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் ஒன்று திரண்டு மனிதச்சங்கிலி அரண் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம்-சென்னை 8வழிச்சாலைக்கு தேர்வு செய்யப்பட்ட வனப்பகுதிகளில் முக்கியமானது சேர்வராயன் மலையடிவாரத்தில் உள்ள மஞ்சவாடி கணவாய் வனப்பகுதி. இதனை சுற்றியுள்ள ஆச்சாங்குட்டப்பட்டி, பூவனூர், காரைக்காடு ஊராட்சிகளில் 11 பழங்குடி கிராமங்கள் உள்ளது.

இங்கு 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழை, கரும்பு, சோளம், தீவனப்புல், பூச்செடிகள், நெல், காய்கறிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் சமீபகாலமாக போதிய மழையில்லாததால் இவற்றை சாகுபடி செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதேபோல் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி, விளைநிலங்களில் புகுந்து விடும் விலங்குகள், பயிர்களை நாசம் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்ைக வைத்து வருகின்றனர். அதே நேரத்தில் பயிர்களை காப்பாற்ற தாங்களே ஒன்று திரண்டு மனிதச்சங்கிலி அரண் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: எங்கள் பகுதிக்கு உட்பட்ட சேர்வராயன் மலையில் 50க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள், நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. இவை அனைத்தும் தொடரும் வறட்சியால், இவை உணவு மற்றும் தண்ணீர்தேடி கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் மனமுடைந்து பலர், நகரப்பகுதிகளுக்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனாலும் போதிய வருவாய் இல்லை. இந்நிலையில் தற்போது ஓரளவு கோடைமழை பெய்துள்ளதால் மீண்டும் விவசாயம் செய்யலாமா? என்பது குறித்து ஆலோசித்தோம். இந்த கூட்டத்தில் ‘‘சேர்வராயன் மலையில் மஞ்சவாடி கணவாய்க்கு அருகில் வனவிலங்குகள் சரணாலயம் அமைக்க வேண்டும்.

அப்போது வனவிலங்குளை பாதுகாப்பதோடு, விவசாயிகளுக்கும் எந்த பிரச்சினையும் வராது. எனவே அரசு, இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதேபோல் ‘‘தற்போது சாகுபடி செய்யப்படும் பயிர்களை காக்க, ஜூன் 15ம்தேதி முதல், விவசாயிகளே ஒன்று திரண்டு மனிதச்சங்கிலி அரண் அமைக்க வேண்டும்’’ என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
சேலத்தில் 104.9 டிகிரி வெயில் கொளுத்தியது

சேலம், மே 7: அக்னி நட்சத்திரத்தில் நேற்று சேலம் மாவட்டத்தில் 104.9 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.  நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் அக்னி தொடங்குவதற்கு முன்பு வேலூர், திருத்தணி, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் 108 முதல் 111 பாரன்ஹீட் டிகிரி வெயில் அளவு நீடித்தது. அக்னி வெயில் தொடங்கிய பிறகு வேலூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது. சேலம் நாமக்கல் மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது.

இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பக்காற்றின் அலை நான்கு நாட்களுக்கு நீடிக்கும் வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சேலத்தில் கடந்த 5ம் தேதி 103.3 டிகிரியும், நேற்று (6ம் தேதி) 104.9 டிகிரியும் வெயில் அடித்தது. நேற்று பகலில் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : human beings ,Manjavadi Cuttack ,
× RELATED ஆற்றில் குளிக்க வருவோரை குறிவைத்து 6...