×

11.5 கோடி நகை கொள்ளை சம்பவம் முக்கிய குற்றவாளியை தேடி மதுரை விரைந்தது தனிப்படை: மனைவி, பெற்றோரிடம் தீவிர விசாரணை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் அமித்திஸ்ட் என்ற நகைக்கடை சார்பில், மதுரையில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் கண்காட்சி நடத்திவிட்டு, விற்காத ₹11.5 கோடி நகைகள் மற்றும் ₹7.5 லட்சத்துடன் கடந்த 28ம் தேதி காலை காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.காரில் நகைக்கடை பொது மேலாளர் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தயாநிதி ஸ்வைன் (50) உள்பட 5 பேர் வந்தனர். மாலை 5 மணியளவில் செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே வந்தபோது, மர்ம கும்பல் ஒன்று தயாநிதி ஸ்வைன் வந்த காரை மடக்கி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்று கூறி, காரில் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்து சென்றது. விசாரணையில் அது போலி கும்பல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தயாநிதி கொடுத்த தகவலின் பேரில், நகைக்கடையில் ஏற்கனவே வேலை பார்த்த சென்னையை சேர்ந்த 2 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி ₹60 லட்சம் கேட்டதால், வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டனர் என்பது தெரிந்தது. இவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், நகைக்கடையில் வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. அவரது புகைப்படத்தை காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பது நேற்று தெரியவந்தது. பின்னர், வியாசர்பாடிக்கு சென்ற தனிப்படை போலீசார். கொள்ளையனின் மனைவி மற்றும் பெற்றோரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், ‘கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி என புகைபடம் வெளியிட்ட பின் அவர் தலைமறைவாகி விட்டார்’ என தெரிவித்தனர். அவரது மனைவி, பெற்றோரை செங்கல்பட்டு டவுன் போலீசார் அழைத்து வந்தனர். பின்னர், காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, செங்கல்பட்டு டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் மதுரை விரைந்துள்ளனர். நகைகளை கடத்தி சென்ற கும்பலும் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதால், இன்னும் ஒருநாளில் குற்றவாளிகள் மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை கைப்பற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Tags : jewelry incident ,Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை