×

வாய்க்கால் உடைப்பை சரி செய்ய கோரிக்கை

ஈரோடு, மே 1: காலிங்கராயன் வாய்க்கால் உடைப்பை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 4வது மண்டல பகுதியான மோசிகீரனார் வீதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பாதாள சாக்கடையின் மேல் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது.  இந்த பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் காலிங்கராயன் வாய்க்கால் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தினமும் வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் வெளியேறி பாதாள சாக்கடையில் கலந்து வருகிறது.
ஏற்கனவே, இந்த பகுதி பள்ளமான பகுதியாக உள்ளதால் மழைக்காலங்களில் வரும் மழைநீரும், சாக்கடைநீரும் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், இந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தற்போது வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாக்கடை கால்வாய்க்குள் அதிக அளவில் தண்ணீர் வருவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் நிலை உள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து காலிங்கராயன் வாய்க்கால் பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவும், கழிவுநீர் முறையாக வெளியேறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு
ஈரோடு, மே 1: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கிறது. இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் ஓட்டல், பழக்கடை, புத்தக கடை, செல்போன் கடை, செருப்பு கடை என பல்வேறு கடைகள் உள்ளன.
இந்த கடைகளை நடத்த மாநகராட்சி நிர்வாகம் ஏலம் விட்டுள்ளது. கடைகளை நடத்தி கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கடை வைக்க வேண்டும் என  மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால், இங்குள்ள கடைக்காரர்கள் தங்களது கடைகளை பொதுமக்கள் நடந்து செல்லும்  நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். கடையின் உள்பகுதியில் வைத்து விற்க வேண்டிய பொருட்களை நடைபாதையில் வைத்து விற்கின்றனர்.
இதனால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பயணிகள் பஸ் நிறுத்தும் பிளாட்பாரம் வழியாக செல்கின்றனர்.
குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாடகைக்கு ஏலம் எடுத்துள்ள கடைக்காரர்கள் தங்களது கடைகளை உள்வாடகைக்கு விட்டுவிட்டு நடைபாதையில் அனுமதி இல்லாமல் கடை வைத்துள்ளனர். ஆகவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில்,`நடைபாதைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நடந்து சென்றால் அங்குள்ள கடைக்காரர்கள் இப் பகுதி வழியாக வரக் கூடாது என அச்சுறுத்தும் வகையில் மிரட்டி வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இந்த பஸ் ஸ்டாண்டில் ஆய்வு நடத்தி நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,`குறிப்பிட்ட இடத்தில்தான் கடைகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளார்களா என்பது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : breaking ,
× RELATED ஒரே மேடையில் பாஜ கூட்டணி தலைவர்கள் தமாகா இப்தார் நோன்பு திறப்பு