×

இன்று உழைப்பாளர் தினம் கொண்டாட்டம் கரையேற வழியின்றி தவிக்கும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சொந்த வீடுகள் இல்லாமல் தவிப்பு

பெரம்பலூர், மே 1: இன்று (மே1ம் தேதி) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கரையேற வழியின்றி காலங்காலமாக கல்லுடைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் சொந்த வீடுகளின்றி சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  கிபி 18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணிநேர கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது.
அனைத்து நாடுகளிலும் வெடித்த தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக 1889ல் பாரீசில் சோசலிச தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்கூடி கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்து செல்வது, 1890 மே1ம் தேதியன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டது.

இதுவே மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைபிடிக்க வழிவகுத்தது. இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமை வாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர் 1923ல் சென்னை உயர்நீதி மன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தினவிழாவை கொண்டாடினார். இன்றைக்கு தமிழகத்தில் தொழிலாளர்களுக்கென நலவாரியங்கள் அமைக்கப்பட்டு அதில் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என அனைத்து வகையான தொழிலாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி பாதுகாப்பு, காயமடைந்தால், இறந்தால் இழப்பீட்டு தொகை, அவர்களது வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்குதல் என அரசின் பல்வேறு திட்ட பணிகளை, பண பயன்களை பெற்று தருகிறது. இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்பான இருப்பிடம், தரமான ஊதியம், போதுமான உணவு வசதிகளின்றி இன்றளவும் திண்டாடி தான் வருகின்றனர். இதற்கு பெரம்பலூர் மாவட்டம் எசனையில் உள்ள கல்லுடைக்கும் தொழிலாளர்களது வாழ்க்கை சாட்சியாகவுள்ளது.

பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் எசனை காட்டுமாரியம்மன் கோயிலில் இருந்து நாவலூர் செல்லும் வழியில் மலைக்குன்றுகளின் இடையே கல்லுடைக்கும் தொழிலை மேற்கொண்டு வரும் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது இருப்பிடம் எசனை, கீழக்கரை ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கும் பொதுவான இடத்தில் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, துறைமங்கலம், வடக்குமாதவி, எளம்பலூர், செங்குணம், கவுல்பாளையம், மருதடி, எறையூர், பாடாலூர், நாரணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட கிரஷர்கள் உள்ளன. பாறைகளை உடைத்து தூள்தூளாக்கும் கிரஷர்கள் கணக்கற்ற நிலையில் காணப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் தங்கள் கைளால் சுத்தியலை கொண்டு கருங்கற்களை உடைத்து கட்டுமான பணிகளுக்கான ஜல்லி கற்களை உருவாக்கும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இதில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டும் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரித்து விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.விஷ ஜந்துக்களின் இடையே பாதுகாப்பற்ற சூழலில், கடுமையான வெயிலில் கருங்கற்களை உடைத்து தூளாக்கும் இப்பணிகளை மேற்கொள்ளும் இவர்களுக்கு இன்று வரை மத்திய, மாநில அரசுகளின்கீழ் கட்டி தரப்படும் இந்திரா நினைவு குடியிருப்புகளோ, பசுமை விடுகளோ கட்டி தரப்படவில்லை.

லட்சக்கணக்கில் கைநிறைய சம்பாதிக்கும் அரசு ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரும் அரசு, கறடுமுரடான கற்களை நொருக்கி, கைநியைக் காயங்களோடு பணிபுரியும் இந்த கல்லுடைக்கும் தொழிலாளர்களை கண்டுகொள்ளாமல் தான் கருணையின்றி இருந்து வருகிறது.

உலகமே மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை கடைபிடிக்கும் சூழலில் தமிழக அரசோ பெயருக்கு விடுமுறை அளித்து இதுபோன்று உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு தர மனது வைக்காதது ஏனென்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகங்களும் இதற்கு நிரந்தர தீர்வுகாண முடியாத நிலையில் தான் காலங்காலமாக இருந்து வருகிறது.


Tags : Workers Day Celebration ,homes ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...