×

நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் வெயிலில் நிற்கும் அவலம்

காலாப்பட்டு, ஏப். 30:  புதுச்சேரியின் எல்லை பகுதியான காலாப்பட்டு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.புதுவையின் எல்லை பகுதியான காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, மத்திய சிறை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள், மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையும் அமைந்துள்ளதால் ஏராளமான வாகனங்களும் இவ்வழியே செல்கின்றன.

இந்நிலையில் காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் எதுவும் இல்லை. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் நிற்க நிழலின்றி தவித்து வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. சிலர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கடைகளில் நிற்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் வியாபாரம் நடக்கும் இடங்களில் ஏன் இப்படி வந்து நிற்கிறீர்கள் என கடைக்காரர்கள் பயணிகளிடம் கோபமாக கேட்கிறார்கள். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம், தகராறு ஏற்படும் சூழல் உருவாகிறது.

கனகசெட்டிக்குளத்தில் நிறைய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளதால் தொழிலாளர்கள், வியாபாரம் நிமித்தமாக பயணிகள் வந்து செல்கிறார்கள். புதுச்சேரியில் இருந்து அடிக்கடி பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால்கனகசெட்டிக்குளத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பஸ் நிலையம் இல்லாததால், மக்கள் சாலையோரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பஸ்களை போக்குவரத்து மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையிலேயே வளைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துக்களும் நடக்கிறது.எனவே, காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்கள் அமைக்க வேண்டும், கனகசெட்டிக்குளத்தில் தகுதியான இடம் ஒன்றை தேர்வு செய்து பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Passengers ,
× RELATED சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50...