×

ஜமுனாமரத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருவண்ணாமலை, ஏப்.28: ஜமுனமரத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். ஜமுனாமரத்தூர் தாலுகா ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள காட்டில் தினமும் ஆடு மேய்க்க செல்வது வழக்கம். அப்போது சிறுமியுடன் ஆடுமேய்த்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த முத்துசாமியின் மகன் முருகன்(18) என்பவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு காட்டுப்பகுதியில் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி 2 மாதம் கர்ப்பமடைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி கடந்த 3ம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, டாக்டர்கள் அவரிடம் விசாரித்த போது சமையல் செய்யும் போது தீப்பிடித்து கொண்டதாக முதலில் கூறினார். ஆனால் சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறி அழுதார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர், முருகன் மீது நடவடிக்கை கோரி போளூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்து வேலுர் மத்திய சிறையில் அடைத்தார்.

Tags : Jaffna Manorama ,
× RELATED மின்னல் தாக்கி 4 கடைகளில் தீ விபத்து பல...