×

சிறுமிகள் பாலியல் வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும்

புதுச்சேரி, ஏப். 28: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2014ம் ஆண்டு புதுச்சேரியில் 3 சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிவிட்ட கொடுமை அனைத்து பகுதி மக்களையும் வேதனைக்கு உள்ளாக்கிய மோசமான செயலாகும். குழந்தைகள் நலக்குழு நடவடிக்கை எடுத்ததன் பெயரில் 9 காவல்துறையினர் மற்றும் சிலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். குற்றங்களை தடுக்கவும், பொதுமக்கள், பெண்கள் போன்றவர்களுக்கு பாதுகாவலனாக செயல்பட வேண்டிய காவல்துறையில் உள்ளவர்கள் பலர் இந்த மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது காவல்துறையின் மீது பல கேள்விகளை எழுப்பியது. குற்றவாளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அந்த சமயத்தில் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்த உயரதிகாரி இவ்வழக்கில் தொடர்புடைய 9 காவலர்களை பணிநீக்கம் செய்ததோடு, தேடப்படும் குற்றவாளிகள் என்றும் அறிவித்தார். இருப்பினும், இவ்வழக்கை நீர்த்துபோக செய்யும் வகையில் தான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

 குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற குற்றங்களை தடுப்பதற்கு இயற்றப்பட்ட சட்டத்தின் விதிகள்படி இந்த வழக்கை ஓராண்டிற்குள் முடித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தும் கடந்த நான்கு ஆண்டுகளாக குற்றவாளிகளுக்கு சாதகமாக இவ்வழக்கு திட்டமிட்டு காலம் தாழ்த்தப்பட்டது. மேலும் காவல்துறையின் ஒரு பகுதி, அரசு வழக்கறிஞர்களின் நேர்மையின்மை, பணபலம் போன்றவற்றால் தற்போது இவ்வழக்கின் குற்றவாளிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகை செய்யும். அதுமட்டுமின்றி சமூகத்தில் மேலும் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறுவதற்கு வழிவகை செய்யும். எனவே புதுச்சேரி அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் ஆட்சியாளர்கள் உண்மையிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளை தடுக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக இவ்வழக்கை மேல்முறையீடு செய்து தொடர்ந்து நடத்திட வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Girls ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்