×

காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை அளிப்பதில் தாமதம்

காரிமங்கலம், ஏப்.25: காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரிமங்கலம்-மொரப்பூர் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மையம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 24 மணி நேரமும் செயல்படும் சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. இங்கு பிரசவ வார்டும் உள்ளதால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், இங்கு பிரசவத்திற்காக வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தின் அருகே, காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், இங்கு அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக அகரம் பிரிவு சாலை, கெரகோடஅள்ளி பிரிவு சாலை, பாலக்கோடு சாலைகளில் அதிக  விபத்து ஏற்படுகிறது. இவ்வாறு விபத்தில் சிக்கி காயத்துடன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்களோ, செவிலியர்களோ இல்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன், விபத்தில் சிக்கிய 2 பேர் காயத்துடன் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், சுமார் ஒரு மணி நேரமாக அவர்களை காக்க வைத்தும், சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதையடுத்து, அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து மருத்துவ அலுவலர் ரங்கசாமி கூறுகையில், ‘காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதனால் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் கால தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, விரைவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்,’ என்றார்.

Tags : Doctors ,Government Hospital ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...