×

பென்னாகரம் அருகே பிளஸ்2 மாணவியை கடத்திய கும்பல்

தர்மபுரி, ஏப்.25: பென்னாகரம் அருகே பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கடத்தி சென்றதாக மாணவியின் பெற்றோர் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெரும்பாலை சின்னம்பள்ளியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியின் பெற்றோர் நேற்று தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் பென்னாகரம் அருகே பெரும்பாலை அடுத்த சின்னம்பள்ளி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களது 17 வயது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி பகல் 1 மணிக்கு வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். அதன் பின்னர் எனது மகள் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் தேடி விசாரித்த போது, அரக்காசனஅள்ளியை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது பெற்றோர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் எங்களது மகளை கட்டாயப்படுத்தி கடத்தி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக சம்பவம் நடந்த 16ம் தேதியன்றே பெரும்பாலை போலீசில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். மேலும் மகளை காணவில்லை என புகார் கொடுத்தால் மட்டுமே பதிவு செய்வோம் என போலீசார் கூறினர். இதையடுத்து எனது மகளை காணவில்லை என நாங்கள் புகார் செய்தோம். ஆனால் 9 நாட்கள் ஆகியும் இதுவரை பெரும்பாலை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எஸ்பி உரிய விசாரணை நடத்தி எங்களது மகளை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : gang ,Plus 2 ,Pennakaram ,student ,
× RELATED பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு