×

ஒகேனக்கல்லில் சுற்றுலா பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

பென்னாகரம், ஏப்.25: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்து, பரிசல் ஓட்டிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, லைப் ஜாக்கெட் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கோடை விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் தற்போது 1300 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதையடுத்து, பரிசல் சவாரி செய்வதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷனில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்து, பரிசல் ஓட்டிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பென்னாகரம் டிஎஸ்பி மேகலா தலைமை தாங்கினார். இதில், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபாணி, பென்னாகரம் பிடிஓ ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் கலந்து கொண்டனர். அப்போது, பரிசல் ஓட்டிகள் 4 சுற்றுலா பயணிகளை பரிசலில் ஏற்றிச்செல்ல வேண்டும். கட்டாயம் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் அணிவிக்க வேண்டும். பரிசலில் ஏறியது முதல் கரைக்கு திரும்பும் வரை சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். சுற்றுலா பயணிகளை அதிக அழமான பகுதிக்கு அழைத்து செல்லக்கூடாது. ஆழம் அதிகமுள்ள பகுதியில் குளிக்க அனுமதிக்கக்கூடாது. மீறினால் குற்ற வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரிசல் ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சந்தேகம் இருந்தால், ஒகேனக்கல் போலீசாரை பரிசல் ஓட்டிகள் தொடர்பு ெகாள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

Tags : Consultation ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...