×

திருமானூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யாததால் காலி குடங்களுடன் மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

அரியலூர், ஏப். 23: மூன்று மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் ெசய்யாததால் திருமானூர் அருகே கோவிலூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கோவிலூர் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தவித்து வந்தனர். மேலும் வயல்களுக்கு வரும் தண்ணீரை பிடித்து குடிநீராகவும், குளிப்பதற்கும் மக்கள் பயன்படுத்தினர். எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்துக்கு பலமுறை பொதுமக்கள் தெரியப்படுத்தினர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்ைல.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கோவிலூரில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டம் துவங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக புதிய மோட்டார் பொருத்தி குடிநீர் வழங்கப்படும். குடிநீர் குழாய்களில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக மினி டேங்க் அமைத்து தரப்படும். கிராமத்தில் எரியாத மின்விளக்குகள் சரி செய்யப்படும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Thirumannur ,
× RELATED பொதுமக்கள் அவதி திருமானூர் அருகே போலீசாரை தாக்கிய 2 பேர் கைது