×

தொடரும் அலட்சிய போக்கால் நாய்க்கடி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு கருத்தடை வேகப்படுத்தப்படுமா?

சேலம், ஏப்.23:நாய்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பால், கடி வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இதில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 10சதவீதமாகும். கடந்த காலங்களில் தெருநாய்கள் வீடுகளில் வைக்கப்படும் உணவு மற்றும் குப்பைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தன. ஆனால் 15 ஆண்டுகளில் சிக்கன்கடை மற்றும் சில்லி சிக்கன் கடைகள் ஆயிரக்கணக்கில் உருவாகிவிட்டது.

இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் கோழிகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.  இறைச்சி தவிர மற்ற கழிவுகளை, கடை உரிமையாளர்கள் சாலையிலும், குப்பையிலும் கொட்டி விடுகின்றனர். இதுபோன்ற கழிவுகளை நாய்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் வெறித்தன்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வாகனத்தில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. சமீப காலமாக நாய்களின் இனப்பெருக்கமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே விபரீதங்களை தவிர்க்க நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பாதுகாப்புக்கு நாய்கள் அவசியம் தான். ஆனால், அதே நாயால் பல்லாயிரம் பேர்  பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை நாய்கள்  கடித்துவிடுகின்றன. இதேபோல் நடந்து செல்பவர்களையும், வாகனத்தில் செல்பவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. ஒரு தெருவில் கணக்கெடுத்தால் குறைந்தபட்சம் 2 அல்லது 3 நாய்கள் உள்ளன. இதில் சேலத்தில் மட்டும் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஒரு பெண் நாய் ஒரு முறை கருத்தரித்தால் குறைந்தபட்சம் 4 குட்டியும், அதிகபட்சமாக 10 குட்டியும்   போடுகிறது.

இந்த குட்டிகள் வளர்ந்து, அவைகள் கருத்தரித்து குட்டி போடும் போதும் இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் நாய்களை இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். சேலம் மாநகராட்சி சார்பில் மன்னார்பாளையத்தில் நாய்கள் அறுவை சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றன. இந்த மையம் பெரும்பாலான நாட்களில் செயல்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் வெறிநாய் கடிக்கும்போது, பெயருக்கு 2 அல்லது 3 நாய்களை பிடித்து கருத்தடை செய்கின்றனர். அதன்பின், அதை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.

நேற்றுமுன்தினம் கிச்சிப்பாளையம், களரம்பட்டியில் வெறிநாய் ஒன்று கடித்ததில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதியில் ஒரு நாய் கடித்து இவ்வளவு பேர் காயமடைந்து இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். எதிர்வரும் காலத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம்

சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், ‘‘தெருக்களில் வளர்க்கப்படும் நாய், வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அவ்வப்போது வெறிநாய் தடுப்பூசி போட்டுக்ெகாள்ள வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் வெறிநாய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. நாய்க்கடியை  பொறுத்தவரை கடிப்பட்ட அளவை பொறுத்து அதன் தாக்கம் இருக்கும். நாய்களின் பற்கள் அதிகளவில் ஆழமாக பதிந்து இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். எப்படிப்பட்ட காயமாக இருந்தாலும், கட்டாயம் நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். நாய் கடித்த இடத்தில் முதலில் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்க, உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும். ரத்தம் வெளியேறும் வரை கழுவிவிட்டு அதன் மேல் டிஞ்சர் பென்சாயின் அல்லது டிஞ்சர் அயோடின் போன்ற மருந்தை தடவலாம். பின்பு, தாமதிக்காமல் டாக்டரிடம் சென்று முறையான சிகிச்சை பெறலாம்,’’ என்றனர்.

Tags : buyers ,
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...