×

நெடுஞ்சாலைகளில் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய வழிகாட்டி போர்டுகள்

காரைக்குடி, ஏப்.23: நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி வருகிறது. தவிர ஒரு சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள பலகைகள் பெயர்ந்து பயனற்று போடப்பட்டுள்ளன. இதனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைகின்றனர். காரைக்குடி அருகே கானாடுகாத்தான், செட்டிநாடு, கொத்தமங்கலம், பள்ளத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அரண்மனை போன்ற மிகப் பிரமாண்டமான செட்டிநாட்டு வீடுகளை பார்வையிட தினமும் வெளி நாடுகள், வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா தலங்கள் இருக்கும் இடங்கள், அப்பகுதிகளுக்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பது குறித்த விவரங்கள் அடங்கிய வழிகாட்டி பலகைகள் சுற்றுலா துறை சார்பில் அமைக்கப்பட வில்லை.

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு இடங்கள் குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தவிர நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர்கள், செல்லும் வழி மற்றும் கிலோ மீட்டர்களை விளக்கும் வகைகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டு பலகைகள் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. ஒரு சில இடங்களில் துருபிடித்தும், ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. வழிகாட்டு பலகைகள் முற்றிலும் பெயர்ந்து கிழே விழந்து பயனற்று மூலையில் போடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் செல்லும்  யாரிடமாவது வழி கேட்கும் போது எங்காவது கையை காண்பித்து விடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் கண்ட இடங்களில் சுற்றி திரிவது மட்டுமின்றி, சுற்றுலா தலங்களை பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகளின் எளிதில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் வகையில் மாவட்டம் முழுவதும் சுற்றுலா துறை சார்பில்  போர்டு வைக்க வேண்டும். தவிர மிகவும் மோசமான நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளை மாற்ற வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.







Tags : Wizard boards ,place ,
× RELATED கூமாப்பட்டி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி