×

தேர்தல் பணி இல்லாமலேயே தபால் ஓட்டு பதிவு? ஓட்டு போட முடியாமல் பெண் டாக்டர் ஏமாற்றம்

தர்மபுரி, ஏப்.19: தர்மபுரியில் தேர்தல் பணியில் இல்லாத பெண் டாக்டர், தபால் ஓட்டு போட்டு விட்டதாக கூறி தேர்தல் அதிகாரிகள் கூறியதால், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்த பெண் டாக்டர்(30), பிடமனேரியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 9 மணியளவில், தர்மபுரி நகரில் உள்ள அதியமான் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குசாவடிக்கு சென்றார். அங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் தன்னுடைய பூத் சிலிப்பை கொடுத்தார். அதிகாரிகள் பெயர் பட்டியலில் பார்த்த போது, அந்த பெண் டாக்டர் ஏற்கனவே தபால் ஓட்டு போட்டுவிட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனால், அவர் ஓட்டு பதிவு செய்ய முடியாது என அனுமதி மறுத்து விட்டனர். அதற்கு அந்த பெண் டாக்டர், தான் எந்த தேர்தல் பணியிலும் ஈடுபடவில்லை. தன்னால் எப்படி தபால் ஓட்டு பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், தங்களது மண்டல அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு கூறினர். இதையடுத்து, மண்டல தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்ட பெண் டாக்டர், அவருக்காக சுமார் ஒரு மணி நேரம் வாக்குச்சாவடி முன்பு காத்திருந்தார். பின்னர் அங்கு வந்த மண்டல அதிகாரி, தபால் ஓட்டு பதிவு செய்துள்ளதால், மீண்டும் வாக்களிக்க முடியாது என கூறினார். இதனால், வாக்களிக்க முடியாமல் பெண் டாக்டர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என்னுடைய ஓட்டை வேறொருவர் திருடி தபால் ஓட்டாக போட்டு விட்டதால், நான் வாக்களிக்க முடியாதது எனக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது,’ என்றார்.

Tags : doctor ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...