×

ஆன்மிக நகரில் மக்கள் வெள்ளம் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம்

திருவண்ணாமலை, ஏப்.19: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர்.
நினைக்க முக்தித்தரும் திருக்கோயில் அமைந்த ஆன்மிக திருநகரம் திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களில், அக்னி தலமான அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா நேற்று விமரிசையாக நடந்தது. சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் சென்று வழிபடுவது சிறப்பு மிக்கது. சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் சென்றால் எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அதன்படி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 7.05 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையுடன் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மேலும், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் அமைந்துள்ள சித்திர குப்தன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களின் வசதிக்காக, நேற்று பகல் முழுவதும் திருக்கோயில் நடை அடைக்கப்படாமல், இரவு 11 மணிவரை தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், இன்று அதிகாலை முதல் இரவு வரை தரிசனத்துக்கு அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் மற்றும் திட்டிவாசல் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்ததும் பே கோபுரம் வழியாக வெளியேற வசதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து கோபுர நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் சோதனை நடந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்ததால், வெளியூர்களில் இருந்து பக்தர்களின் வருகை மாலை 6 மணிக்கு பிறகே அதிகரிக்க தொடங்கியது. வாக்குப்பதிவு செய்துவிட்டு, வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டனர். இரவு விடிய, விடிய சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்களின் வெள்ளமாக காட்சியளித்தது.
அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் போன்ற இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தபடி கிரிவலம் சென்றனர். பக்தர்களின் தாகம் தணிக்க பல்வேறு இடங்களில் நீர், மோர், பழச்சாறு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 2,900 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்காக, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 14 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், சென்னையில் இருந்து காட்பாடி, வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நேற்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.கோயில் பிரகாரம் மற்றும் கிரிவலப்பாதை உட்பட 12 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்தது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருந்தனர். முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பட்டன.

Tags : festival ,city ,Thiruvannamalai ,Chithra Poornima ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...